கர்நாடகாவை புரட்டி எடுத்த வரலாறு காணாத மழை.. நிரம்புகிறது கே.ஆர்.எஸ் அணை.. பெருகி வரும் காவிரி
பெங்களூர்: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கியதைத் தொடர்ந்து இடைவிடாமல் கனமழை கொட்டி வருவதன் காரணமாக, மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு வாரத்தில் 14 அடி உயர்ந்துள்ளது.
தமிழக கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்தது.

இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கியதைத் தொடர்ந்து இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்து வருவதன் காரணமாக, மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் (KRS Dam) அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு வாரத்தில் 14 அடி உயர்ந்துள்ளது.
இதேபோன்று, கர்நாடகாவில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக காவிரிப் படுகையிலுள்ள பிற நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. மே 24 ஆம் தேதி அன்று கர்நாடகாவில் பருவமழை தொடங்கியபோது, கே.ஆர்.எஸ் அணையின் நீர்மட்டம் அதிகபட்சமாக 124.8 அடியிலிருந்து 89.1 அடியாகக் குறைந்தது.
எனினும் நேற்று ஞாயிற்றுக்கிழமை, கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து 17,544 கனஅடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 103.7 அடியாக இருந்தது. இதேநிலை நீடித்தால் விரைவில் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளது. மைசூர் மாவட்டம், எச்.டி. கோட் தாலுகாவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அதன் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது.
ஹேமாவதி அணையில், கடந்த வாரத்தில் நீர்மட்டம் ஏழு அடிக்கு சற்று அதிகமாக அதிகரித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை, அணையின் நீர்மட்டம் 2,489 கனஅடி நீர்வரத்தை பதிவு செய்து, அதன் மொத்த உயரமான 2,922 அடியில் இருந்து 2,905.97 கன அடியாக இருந்தது. இதேபோல், ஹாரங்கி அணையின் நீர் மட்டமும் 9 அடி உயர்ந்துள்ளது. அங்கு கடந்த மே 24 அன்று நீர்வரத்து 2,832.78 கன அடியாக இருந்த நிலையில், தற்போது 2,849.85 கன அடியாக உயர்ந்துள்ளது.
பெங்களூரில் உள்ள வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை மே 25 அன்று தொடங்கி மே 28 ஆம் தேதிக்குள் மாநிலம் முழுவதுமே மழையைக் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். மே 25 முதல் 31 வரை, மாநிலம் முழுவதும் 298% அளவுக்கு அதிகமாக மழை பெய்துள்ளது, மாநிலம் முழுவதும் சராசரி மழைப்பொழிவு 92 மி.மீ ஆக பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications