காவிரி: கர்நாடகா எம்.பிக்கள் வீடுகள் முற்றுகை- பெங்களூரில் கன்னட ரக்ஷன வேதிகே 'பெண்கள்’ போராட்டம்!
பெங்களூர்: காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா எம்.பி.க்கள் வீடுகளை கன்னட ரக்ஷன வேதிகே இயக்கத்தின் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு 3,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்பது காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவு. ஆனால் கர்நாடகா அரசு இதனை ஏற்க மறுத்துவிட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிடப் போவதாகவும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடகா பந்த்: கர்நாடகாவில் தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க கூடாது என்பதை வலியுறுத்தி நாளை கர்நாடகா தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கர்நாடக பந்த் போராட்டம் நாளை நடைபெற இருக்கிறது. ஏற்கனவே மண்டியா பந்த், பெங்களூர் பந்த் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கர்நாடகா பந்த் போராட்டத்தை வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கூட்டமைப்பு நடத்துவதாக அறிவித்திருக்கிறது. இதனையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கர்நாடகா பந்த்- அரசு ஆதரவு : இந்நிலையில் கர்நாடகாவில் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிரான போராட்டங்கள் நீடிக்கின்றன. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசும் எந்த போராட்டத்தையும் முழு அடைப்பையும் நாங்கல் தடுத்து நிறுத்த மாட்டோம் என அறிவித்துவிட்டது. இதனால் எதிர்க்கட்சிகளான பாஜக, மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் ஆதரவுடன் கன்னட விவசாயிகள், கன்னட அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்துகின்றன.

மண்டியாவில் தொடர் போராட்டம்: மண்டியா மாவட்டத்தில் காவிரி ஆற்றுப் பாலத்தின் மீது காலி குடங்கள், நெற்பயிர்களுடன் கன்னட விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பியபடி போராட்டம் நடத்தினர். காவிரியில் ஒரு சொட்டு நீரைக் கூட தமிழ்நாட்டுக்கு தரக் கூடாது என அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். மண்டியாவில் 3 வாரங்களாக தமிழ்நாட்டுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
எம்.பிக்கள் வீடுகள் முற்றுகை: பெங்களூரில் கன்னட ரக்ஷன வேதிகே என்ற கன்னட அமைப்பினர் இன்றும் போராட்டம் நடத்தினர். பெங்களூரில் கர்நாடகா எம்.பிக்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டத்தை இந்த அமைப்பு நடத்தி வருகிறது. கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் பெண்கள் பிரிவினர் பெங்களூரில் இன்று எம்.பிக்கள் வீடுகளை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications