"தொலைச்சிடுவேன், ஜாக்கிரதை'.. "திமுக கவுன்சிலர்" அட்ராசிட்டி.. சாட்டையை சுழட்டிய கோர்ட்.. செம குட்டு
திமுக கவுன்சிலர் கோரிய முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
சென்னை: டியூட்டியில் இருந்த போலீசாரை மிரட்டிய செயல் ஏற்க முடியாது என்று கூறியுள்ள சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், திமுக இளைஞரணி முன்னாள் நிர்வாகியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது..!
சென்னை ராயபுரம் 51 வது வார்டு திமுக கவுன்சிலர் நிரஞ்சனா கணவர் ஜெகதீசன்.. கடந்த 30-ம் தேதி நள்ளிரவு ஜேபி கோவில் தெருவில், தன்னுடைய ஆதரவாளர்களுடன் மது அருந்திவிட்டு, அவர்களது வாகனங்களை சாலையின் குறுக்கேயும் நிறுத்தி விட்டு, பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதி வழியே வந்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தியாகராஜன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இரவு நேரத்தில் கும்பலாக நிற்பது குறித்து விசாரித்தனர்.

ஜாக்கிரதை
கூட்டமாக நின்றிருந்தததால், அவர்களை கலைந்து போகுமாறும் சொல்லி உள்ளார்.. இதனால் கோபமடைந்த அந்த கும்பல் "எங்களை கேட்பதற்கு நீங்கள் யார்? "நான் இந்த ஏரியா கவுன்சிலர்.. நான் நினைத்தால் உன்னை காலி செய்து விடுவேன், ஜாக்கிரதை" என்று ஜெகதீசன் மிரட்டியுள்ளார். இந்த சம்பவத்தை போலீஸ்காரர் தியாகராஜன் தன்னுடைய செல்போனில் வீடியோ பிடிக்க முயன்றார்..

கெட்ட வார்த்தைகள்
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், தியாகராஜனின் செல்போனை தட்டிவிட்டதுடன், போலீஸ்காரர்களை தகாத வார்த்தைகளால் மிரட்டி விட்டுச் சென்றது.இது தொடர்பாக தியாகராஜன், வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்... அந்த புகாரின் அடிப்படையில் ஜெகதீசன், சதீஷ், வினோத் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் 5 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

4 பேர் கைது
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ஜெகதீஸன், சதீஷ், அறிவழகன் வினோத் ஆகிய 4 பேர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில், விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என தெரிவிக்கப்பட்டது..

முன்ஜாமீன்
இதையடுத்து நீதிபதி, சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பணியில் உள்ள காவலர்களை மிரட்டும் இந்த நபர்களால் மற்றவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், இதனை அனுமதித்தால் சட்டம் ஒழுங்கை பராமரிக்க காவல்துறைக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்த நீதிபதி இது போன்ற செயல்களை ஏற்க முடியாது என்றும், முன் ஜாமீன் வழங்கினால் இது போன்ற செயல்கள் தொடர்வதற்கே வழிவகுக்கும் என்று கூறி அவர்களின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சாட்டை
இதனிடையே ராயபுரம் கிழக்கு பகுதி 51வது வார்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை தகாத வார்த்தையில் திட்டியதாக திமுக நிர்வாகி ஜெகதீசன் மீது புகார் எழுந்த நிலையில், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது... திமுக கவுன்சிலர்கள் மீது சமீபகாலமாகவே தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், அவர்களுக்கெல்லாம் ஒரு பாடமாக, நீதிமன்றம் இன்று தலையில் ஒரு குட்டு வைத்துள்ளது..!












Click it and Unblock the Notifications