பெங்களூரில் மூடப்படும் IT நிறுவனங்கள்? ஊழியர்களுக்கு இனி WFH? அரசுக்கு போன ‛டிமாண்ட்'.. பின்னணி
பெங்களூர்: பெங்களூர் நகரில் உள்ள சாலை பள்ளங்கள் மக்களுக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் அடிக்கடி சாலை பள்ளங்கள் குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து டிரெண்ட்டாக்கி வருகின்றன. இது கர்நாடகா அரசுக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளது. இந்நிலையில் தான் பெங்களூரில் உள்ள ஐடி பார்க்குகளை மூட ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியாவின் ‛சிலிக்கான் வேலி' என்ற புனைப்பெயர் பெங்களூருவுக்கு உள்ளது. இதற்கு முக்கிய காரணங்கள் பெங்களூரில் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் இருப்பது தான். இதனால் கர்நாடகாவின் பிற பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து மக்கள் பெங்களூருவுக்கு படையெடுத்து வருகின்றனர்.

பெங்களூர் நகரின் மக்கள்தொகை தற்போது 1 கோடியை கடந்து விட்டது. வாகனங்களும் தொடர்ந்து பெருகி வருகின்றன. இதனால் Peak Hours-ல் பெரும்பாலான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நீடித்து வருகிறது. இது போதாது என்று தற்போது பல சாலைகள் பள்ளங்களில் உள்ளது.
இந்த சாலை பள்ளங்கள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளன. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் சாலை பள்ளத்தால் விபத்தில் சிக்கி காயமடைவதோடு, உயிரையும் பறிகொடுத்து வருகின்றனர். இதனால் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி உள்ள நிலையில் சாலை பள்ளங்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐடி நிறுவனங்களின் அதிகாரிகள் அரசுக்கு நேரடியாக கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசு சார்பில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணத்தை வைத்து பெங்களூரில் நகரில் உள்ள சாலை பள்ளங்கள் மூடப்பட்டு வருகிறது. இருப்பினும் தற்போது மழை பெய்து வருவது, உடனடியாக வாகனங்கள் செல்வது உள்ளிட்ட காரணங்களால் மூடப்பட்ட சாலைகள் மீண்டும் குண்டும், குழியுமாக மாறி வருகின்றன. இந்த பருவமழை டிசம்பர் வரை நீடிக்கும். இதனால் சாலை பள்ளங்களை மூடுவது பெரும் சவாலாக உள்ளது.
இந்த நிலையில் தான் பெங்களூரில் வசித்து வரும் அமர்நாத் சிவசங்கர் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் அரசுக்கு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளார். ஐடி ஆர்க்கிடெட்டாக இருக்கும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛கோவிட்(கொரோனா) காலத்தில் அவுட்டர் ரிங் ரோடு, ஐடிபிஎல், எலக்ட்ரானிக் சிட்டி, மான்யதா டெக் பார்க், பாக்மனே டெக் பார்க் போன்ற ஐடி நிறுவனங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்தது. இப்போதும் அதுபோன்ற நடவடிக்கையை அரசு கட்டாயப்படுத்தி உத்தரவிட்டால் ஊழியர்கள் மீண்டும் வீட்டில் இருந்து பணியாற்ற முடியும்.
மோசமான சாலை காரணமாக ஐடி ஊழியர்கள் தினமும் பல மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இந்த பயண நேரஅதிகரிப்பால் அவர்கள் தங்களின் பணிக்கான உற்பத்தி நேரத்தை இழக்கின்றனர். இதனால் ஐடி பூங்காக்களை சில மாதங்களுக்கு மூட வேண்டும். ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும். இந்த சமயத்தில் சாலைகள், மழைநீர் வடிகால்கள் சரி செய்வது, மேம்பால கட்டுமானம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இப்படியாக ஒருமுறை பெங்களூரை சரிசெய்ய வேண்டும். அதேபோல் பிஎம்டிசி பஸ்களை அதிகம் வாங்கி இயக்க வேண்டும். மெட்ரோ கட்டுமானத்தை விரைவுப்படுத்த வேண்டும். '' என்று கூறியுள்ளார்.
இந்த ஐடியாவின் பின்னணி என்னவென்றால் ஐடி ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கும்போது ஐடி பார்க்குகளை சுற்றிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்காது. இதனால் சாலை பள்ளங்களை எளிதாக மூடலாம். இதன் காரணமாக தான் அமர்நாத் சிவசங்கர் இந்த ஐடியாவை முன்வைத்துள்ளார்.
மேலும் இந்த பதிவில் அவர் கர்நாடகா துணை முதல்வரும், பெங்களூர் நகர வளர்ச்சித்துறை அமைச்சருமான டிகே சிவக்குமார், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அலுவலகம் உள்பட பல்வேறு நபர்களை டேக் செய்துள்ளார். இந்த கோரிக்கை பற்றி அரசு சார்பில் இன்னும் எந்த பரிசீலனையும் செய்யப்படவில்லை. இருப்பினும் அமர்நாத் சிவசங்கர் பதிவு அதிக கவனம் பெற்றுள்ளது. இது தற்போது வைரலாகி வரும் நிலையில் இந்த திட்டத்தை நிறைவேற்றினால் சாலை பள்ளங்களுக்கு தீர்வு காண முடியும் என்று கூறி வருகின்றனர்


Click it and Unblock the Notifications
