கர்நாடகா 2 ஆக உடைகிறது? 15 மாவட்டங்களுடன் உருவாகும் புதிய மாநிலம்? மோடிக்கு போன கடிதம்
பெங்களூர்: கர்நாடகாவை இரண்டாக பிரிக்க வேண்டும், வடகர்நாடகாவின் 15 மாவட்டங்களை ஒன்றிணைத்து புதிய மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ பரம்கவுடா (ராஜூ) காகே கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கர்நாடகா 2 மாநிலமாக உடைகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் மொத்தம் 31 மாவட்டங்கள் உள்ளன. இதில் பெங்களூர், பெங்களூர் புறநகர், ராமநகர், கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு, மண்டியா, மைசூரு, குடகு, ஹாசன், சிக்கமகளூர், சிவமொக்கா, தட்சிண கன்னடா, சாம்ராஜ்நகர், சித்ரதுர்கா உள்ளிட்ட 15 மாவட்டங்கள் தென்கர்நாடகா மாவட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.

அதேபோல், பீதர், கலபுரகி, விஜயப்புரா, யாதகிரி, பாகல்கோட்டை, பெலகாவி, தார்வார், கதக், கொப்பல், ராய்ச்சூர், உத்தர கன்னடா, ஹாவேரி, விஜயநகர், பல்லாரி, தாவணகெரே உள்ளிட்டவை வடகர்நாடகா மாவட்டங்களாக அழைக்கப்படுகின்றன. இந்நிலையில்தான் கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக , ஜேடிஎஸ் கட்சிகள் மாறி மாறி ஆட்சியை பிடித்தால் வடகர்நாடகா மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இதனால் வடகர்நாடகா மாவட்ட மக்கள் தனி மாநிலம் கோரி வருகின்றனர். இந்த கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆனால் எந்த அரசும் வடகர்நாடகாவின் 15 மாவட்டங்களை தனி மாநிலமாக்குவதை விரும்பவில்லை. இருப்பினும் அந்த மாவட்ட மக்கள் தங்களின் கோரிக்கைகளில் இருந்து பின்வாங்கவில்லை. தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
மேலும் மொழி வாரி மாநிலமாக கர்நாடகா பிறந்த நவம்பர் 1ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் கன்னட ராஜ்யோத்சவா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் வடகர்நாடகா மக்கள் தனிமாநிலம் கோரி போராட்டங்களில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சமீபத்திய விழாவிலும் தனிமாநில கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் தான் கர்நாடகாவில் 15 வடகர்நாடகா மாவட்டங்களை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ பரம்கவுடா (ராஜூ) காகே ஜனாதிபதி திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி மற்றும் கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உள்ளிட்டவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். இது பரபரப்பை கிளப்பி உள்ளது. இதுபற்றி காங்கிரஸ் எம்எல்ஏ பரம்கவுடா காகே கூறுகையில், ‛‛ வடகர்நாடகாவின் 15 மாவட்டங்களை சேர்த்து தனி மாநிலமாக்க வேண்டும் என்பது எனது விருப்பம். மக்களின் விருப்பமாக உள்ளது. இதற்கு நான் பலமாக கோரிக்கை வைத்துள்ளேன்.
இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இதன்மூலம் கன்னடம் பேசும் இன்னொரு மாநிலம் உருவாகும். இது நமக்கான இன்னொரு பெருமையாக இருக்கும். வடகர்நாடகாவில் அனைத்து வளங்களும் உள்ளன. ஒரு கோடி மக்கள் தனிமாநிலம் கோரி கையெழுத்திட்டுள்ளனர்'' என்றார். இது கர்நாடகாவில் தற்போது பரபரப்பை உருவாக்கி உள்ளது.
ஆனால் இத்தகைய கோரிக்கை ஒன்றும் கர்நாடகாவில் புதிது இல்லை. நீண்டகாலமாக இந்த கோரிக்கை இருந்து வருகிறது. எந்த அரசும் வடகர்நாடகா மாவட்டங்களை தனிமாநிலமாக்க வேண்டும் என்று விரும்பவில்லை. மேலும் தற்போது கடிதம் எழுதியுள்ள காங்கிரஸ் எம்எல்ஏ பரம்கவுடா காகே இதுபோன்று கடிதம் எழுதுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு ஜனவரி 3ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கும், அதன்பிறகு ஜனவரி 5ம் தேதி பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதி இருந்தார்.
இப்படி கடிதம் எழுதியுள்ள பரம்கவுடா காகே பெலகாவி மாவட்டம் காக்வாட் சட்டசபை தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக உள்ளார். இவர் பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர். கடந்த 2004, 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் காக்வாட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு 2019 இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்த 2023ல் காங்கிரஸ் சார்பில் அந்த தொகுதியில் மீண்டும் வென்ற நிலையில் தனிமாநிலம் கோரி கடிதம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications