தமிழகம் உட்பட.. எந்த மாநிலத்திலிருந்து பெங்களூர் சென்றாலும்.. கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம்!
பெங்களூர்: தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலத்தில் இருந்து கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் சென்றாலும் கொரோனா நெகட்டிவ் பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்று அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் அறிவித்துள்ளார்.
இந்த உத்தரவு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
பெங்களூரு நகரில் சமீபகாலமாக கொரோனா நோய் பரவல் மிகவேகமாக அதிகரித்து வருவதால் இது போன்ற உத்தரவை பிறப்பித்துள்ளது அந்த மாநில அரசு.

பெங்களூர் நிலவரம்
வியாழக்கிழமையான இன்றைய நிலவரப்படி கர்நாடகாவில் 2500 என்ற அளவுக்கு கொரோனா நோய் பாதிப்பு பதிவாகியுள்ளது. இதில் பெங்களூரில் மட்டும் 1,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய அளவில் அதிகமாக கொரோனா நோய் பரவல் ஏற்பட்டு கொண்டு இருக்கக்கூடிய நகரங்களில் டாப் 10 வரிசையில் பெங்களூரும் ஒரு நகரமாக இருக்கிறது. இந்த நிலையில்தான் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் இன்று ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிற மாநில பயணங்கள்
அமைச்சர் கூறியது இதுதான்: பெங்களூரு நகரில் பதிவாகியுள்ள கொரோனா நோய்த்தொற்றில் சுமார் 60% வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்து வந்தவர்களால் ஏற்பட்டுள்ளது. எனவே பிற மாநிலங்களில் இருந்து பெங்களூர் வருவோருக்கு கொரோனா நெகட்டிவுக்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளோம். பஸ், ரயில், சொந்த கார் உட்பட எந்த ஒரு வாகனத்தில் பெங்களூர் வருவதற்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

கட்டுப்பாடுகள்
பெங்களூரில் பொது நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். இதன்படி உள் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சி என்றால் அதிகபட்சம் 200 பேருக்கு மட்டும் அனுமதி, வெளி அரங்கத்தில் வைத்து நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அதிகபட்சமாக 500 பேருக்கு அனுமதி வழங்கப்படும்.

மருத்துவ சேவை
பெங்களூரு நகரில் சுமார் 200 ஆம்புலன்ஸ்கள் கொரோனா நோய் பாதித்தவர்கள் அழைத்துச் செல்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பணியமர்த்தப்படும், இவ்வாறு சுதாகர் தெரிவித்தார்.

கூடுதல் கெடுபிடி
முன்னதாக, பஞ்சாப், சண்டிகர், மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு வருவோருக்கு, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டு இருந்தது. இப்போது எந்த ஒரு மாநிலத்திலிருந்து பெங்களூர் நகருக்கு யார் வருகை தந்தாலும் அவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்கள்
எனவே தமிழகம் உள்ளிட்ட எந்த ஒரு மாநிலத்தில் இருந்து பெங்களூர் வர வேண்டும் என்றாலும் அரசு மருத்துவமனையில் உள்ள ஆய்வகம் அல்லது தனியார் மருத்துவமனையில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் ஏதாவது ஒன்றில், 72 மணி நேரத்திற்கு உள்ளாக, கொரோனா நெகட்டிவ் சான்றிதழை பெற்றுக் கொண்டு பெங்களூர் வரவேண்டும். ஒருவேளை அப்படி வரத் தவறினால் பெங்களூர் நகர எல்லையில் கர்நாடக சுகாதாரத்துறை சார்பில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். ரிசல்ட் வெளியாகும் வரை அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications