மனைவின்னு நான் இருக்கேன்! ஆனால் நீங்கள்... பெங்களூர் கமிஷனருக்கு தர்ஷனின் மனைவி கடிதம்
பெங்களூர்: மனைவியாக நான் இருக்கும் போது நீங்கள் எப்படி அப்படி சொல்லலாம் என பவித்ரா கவுடா குறித்து நடிகர் தர்ஷனின் மனைவி பெங்களூர் காவல் துறை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனிடையே தர்ஷன் உள்பட 15 பேரின் நீதிமன்ற காவல் வரும் 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

இது தொடர்பாக போலீஸார் நடத்தி வரும் விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் கிடைத்த முக்கிய தகவல் என்னவெனில் தர்ஷனின் சட்டப்பூர்வ திருமணமான ஒரே மனைவி நான்தான் என விஜயலட்சுமி என்பவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பெங்களூர் காவல் துறை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தர்ஷன் விவகாரம் குறித்து விளக்குவதற்காக பத்திரிகையாளர் சந்திப்பை நீங்கள் (ஆணையர்) நடத்திய போது தவறாக அறிக்கையை கொடுத்துள்ளீர்கள்.
அதாவது பவித்ரா கவுடா தர்ஷனின் மனைவி என குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த தவறு கர்நாடகா உள்துறை அமைச்சர் மற்றும் தேசிய மீடியாக்கள் தொடர்ந்து செய்தது. ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன் தம்பதி கைது என கூறப்பட்டு வருகிறது. இது எதிர்காலத்தில் எனக்கும் எனது மகன் வினீஷுக்கும் சிக்கலை கொடுக்கும்.
பவித்ரா கவுடா, சஞ்சய் சிங் என்பவரை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். எனவே இந்த உண்மைகள் போலீஸாரின் ஏடுகளில் பதிவு செய்யப்பட வேண்டும். பவித்ரா எனது கணவரின் தோழி என்பதுதான் உண்மை. அவர், தர்ஷினின் மனைவி அல்ல. நான் மட்டும்தான் சட்டப்பூர்வமாக தர்ஷனை திருமணம் செய்துக் கொண்டேன்.
எங்கள் திருமணம் தர்மசாலாவில் நடந்தது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் தர்ஷன் உள்ளிட்டோருக்கு ஜூலை 4ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய நீதிமன்றக் காவல் முடிந்ததை தொடர்ந்து அவர்கள் அனைவரும் பெங்களூர் மத்திய சிறை மற்றும் தும்கூர் மாவட்ட சிறை அதிகாரிகளால் காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது அவர்களுடைய நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்க வேண்டும் என அரசு தரப்பு தெரிவித்தது. இதையடுத்து அவர்கள் அனைவரின் நீதிமன்றக் காவலும் 18ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக நடிகர் தர்ஷனின் முன்னாள் மேலாளர் மல்லிக்ராஜுன் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் காணாமல் போயிருந்ததும் அவர், தர்ஷனிடம் ரூ 2 கோடி வரை கையாடலில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது. அது போல் தர்ஷனின் பண்ணை வீட்டில் மேலாளராக இருந்த ஸ்ரீதர் என்பவர் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரேணுகாசாமி கொலை சம்பவம் வெளியே வராமல் இருக்க ரூ 50 லட்சம் பணம் கொடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்காக தர்ஷன், தனது நண்பர் ஒருவரிடம் இருந்து ரூ 40 லட்சம் கடன் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிலிருந்து ரூ 37.40 லட்சம் தொகையை போலீஸார் தர்ஷன் வீட்டில் இருந்து மீட்டனர்.












Click it and Unblock the Notifications