பாதுகாப்பை மீறி.. மோடியை நோக்கி பூ மாலையுடன் ஓடி வந்தது ஏன் தெரியுமா? சிறுவன் சொன்ன தகவல்!
பெங்களூர்: கர்நாடக மாநிலம் உப்பள்ளியில் நடைபெற்று வரும் தேசிய இளைஞர் திருவிழாவை தொடங்கி வைப்பதற்காக பலத்த பாதுகாப்புடன் காரில் வந்துகொண்டிருந்த பிரதமர் மோடியை பாதுகாப்புகளை மீறி சிறுவன் ஒருவன் நெருங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மோடியை நோக்கி பூ மாலையுடன் ஓடிவந்தது ஏன்? என்பதற்கு அந்த சிறுவன் பேட்டி அளித்துள்ளான்.
கர்நாடக மாநிலம் உப்பள்ளியில் நடைபெற்று வரும் தேசிய இளைஞர் திருவிழாவை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலமாக உப்பள்ளிக்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார்.

பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
பிரதமர் மோடி வருகையால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்தன. எஸ்.பி.ஜி பிரிவு பாதுகாப்பு போலீசார் வாகனங்களின் இருபுறமும் பாதுகாப்புக்கு வந்து கொண்டிருந்தனர். பிரதமர் மோடியைக் காண பாஜக தொண்டர்களும் பொதுமக்களும் இருபுறமும் திரண்டு நின்றனர். அவர்களை பார்த்த பிரதமர் மோடி உற்சாகத்துடன் காரின் கதவை திறந்து வைத்தபடி கைகளை அசைத்தபடி வந்தார்.

மோடியை நெருங்கி வந்த சிறுவன்
சாலையில் நிற்கும் மக்கள் யாரும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக வந்து விடக்கூடாது என்பதால் கர்நாடக போலீசாரும் பேரிகாடுகள் மற்றும் கயிறுகளை கட்டி வைத்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த பலத்த பாதுகாப்பையும் மீறி 6 ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன் ஒருவன் பேரிகாடுகளுக்கு இடையே இருந்த சிறிய இடைவெளியை பயன்படுத்தி மோடியின் வாகனத்தை நெருங்கி வந்துவிட்டான்.

போலீசார் அதிர்ச்சி
பின்னர் தன்னிடம் இருந்த பூமாலையை பிரதமர் மோடியிடம் கொடுக்க முயன்றான். பலத்த பாதுகாப்பையும் மீறி பிரதமர் மோடி அருகே சிறுவன் வந்ததால் போலீசாரும், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் (எஸ்.பி.ஜி.) அதிர்ச்சி அடைந்தனர். சிறுவனை உடனடியாக பிடித்ததுடன், அவனது கையில் இருந்த பூ மாலையை வாங்கினார்கள். உடனடியாக சிறுவனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் பிடித்து சென்றனர்.

சிறுவனிடம் போலீசார் விசாரணை
அதி உயர் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட இந்த குளறுபடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி சிறுவன் உள்ளே நுழைந்தது பாதுகாப்பு படையினருக்கே ஷாக் கொடுக்கும் வகையில் இருந்தது. பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. பிரதமரை நோக்கி பூ மாலையுடன் வந்த சிறுவனை பிடித்து கர்நாடக போலீசார் விசாரித்தனர். அந்த சிறுவன் மற்றும் அவனது பெற்றோரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

மோடியை பார்க்க அடம்பிடித்தேன்
6 ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவனை அவனது தாத்தா பிரதமரை பார்ப்பதற்காக அழைத்து வந்தது தெரியவந்தது. குனால் என்ற அந்த சிறுவன் இது குறித்து கூறுகையில், ''பிரதமர் மோடி வருவதாக நான் கேள்வி பட்டதும் என்னை எப்படியாவது அழைத்துச் செல்லுமாறு எனது வீட்டில் அடம் பிடித்தேன். வீட்டில் உள்ளவர்கள் அழைத்துச் சென்றதால் அவர்களுடன் மோடியை பார்க்க சென்றேன். மோடி காரில் வந்து கொண்டு இருந்தார்.

மோடி கடவுள் போன்றவர்
எனது மாமாவின் இரண்டரை வயது குழந்தைக்கு ஆர்.எஸ்.எஸ் சீருடை அணிந்து மோடிக்கு மாலை அணிவிக்க வேண்டும் என முடிவு செய்து இருந்தோம். ஆனால் மோடி எங்களை கவனிக்கவில்லை. மோடியின் கார் எங்களை தாண்டி செல்ல தொடங்கியதால் நானே மாலையை எடுத்துக்கொண்டு பேரிகாடுகளுக்கு இடையே இருந்த இடைவெளி வழியாக புகுந்து அங்கே வந்தேன். அங்கு மாலையுடன் இருந்த அனைவரையுமே போலீசார் பரிசோதனை செய்து இருந்தனர்.நான் பிரதமர் மோடியின் தீவிர ரசிகன்..பிரதமர் மோடி மிகவும் நல்லவர்.. கடவுள் போன்றவர்.. பிரதமர் மோடியை நெருக்கமாக பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றான்.












Click it and Unblock the Notifications