பெங்களூரில் இந்திய விமானப்படை அதிகாரி தம்பதி மீது.. கன்னடத்தில் திட்டி கும்பலாக தாக்குதல்!
பெங்களூர்: பெங்களூரில் ஒரு மோசமான சம்பவம் நடந்திருக்கிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படையைச் சேர்ந்த அதிகாரி அதித்யா போஸ் மற்றும் அவரது மனைவி மதுமிதா ஆகியோரை சிலர் தாக்கியுள்ளனர்.
பெங்களூரில் விங் கமாண்டராக பணியாற்றும் அவர் தனது மனைவியுடன் காரில் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பைக் ஓட்டுநர் அவர்களைப் பின்தொடர்ந்து கன்னடத்தில் திட்டத் தொடங்கினார். திடீரென இது கைகலப்பாக மாறியது. இதில் அதிகாரி அதித்யா போஸ் காயமடைந்தார்.

அதித்யா போஸ் இந்த தாக்குதல் பற்றி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் தனது காயங்களைக் காட்டினார். ரத்தம் வடிய வடிய வீடியோவில் காட்சியளித்தார். அந்த வீடியோவில் அதித்யா போஸ் கூறியதாவது: முதலில் திட்டிக்கொண்டே வந்தார்கள் ஆனால் எனது காரில் 'டி.ஆர்.டி.ஓ.' ஸ்டிக்கரைப் பார்த்ததும் இன்னும் கோபமடைந்து, எங்களைத் திட்டவும் அடிக்கவும் தொடங்கினார் என்று தெரிவித்துள்ளார்.
போஸ் கீழேயிறங்கி அவரை எதிர்கொண்டபோது, அவர் சாவியால் நெற்றியில் அடித்தார். பிறகு காரின் மீது கல்லை எறிந்து மீண்டும் தாக்கினார். வீடியோவில், போஸ் ரத்தம் வடிந்தபடி, நடந்த சம்பவத்தைச் சொன்னது பார்ப்போரை கலங்க வைத்தது.

ஆனால் இதைவிட வருத்தமான விஷயம் என்னவென்றால், அங்கே வேடிக்கை பார்த்த பொதுமக்கள் யாரும் உதவி செய்யவில்லை. மாறாக, அவர்களும் அந்த தம்பதியைத் திட்டத் தொடங்கினர். கன்னடத்தில் தம்பதி பேசாததால் ஏரியா மக்களும் கன்னடம் பேசிய தாக்குதல் கும்பலுக்கு சப்போர்ட் செய்ததாகவும், இது போஸை மிகவும் பாதித்ததாகவும் வீடியோவில் கூறியுள்ளார் அவர்.
இந்த தாக்குதல் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. தேசத்திற்காக சேவை செய்யும் ஒருவரை இப்படி தாக்கியது வருத்தமளிக்கிறது. தேசத்திற்காகப் பணியாற்றும் வீரர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம், பொது இடங்களில் நமக்கே பாதுகாப்பு இல்லை என்பதையும், குறிப்பாக நாட்டுக்காக உழைப்பவர்களுக்கு இது போன்ற நிலை ஏற்படும் போது வருத்தமாக இருப்பதையும் காட்டுகிறது. அதேநேரம், டிஆர்டிஓ தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இரண்டு விஷயங்களைப் பற்றி யோசிக்க வைக்கிறது:
- பொது இடங்களில் ராணுவ அதிகாரிகளின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது?
- யாராவது ஆபத்தில் இருக்கும்போது, மக்கள் ஏன் உதவி செய்யாமல் வேடிக்கை பார்க்கிறார்கள் அல்லது வசைபாடுகிறார்கள்?












Click it and Unblock the Notifications