அலறிய பெங்களூர்! தனியார் ஐடி நிறுவன எம்டி, சிஇஓ வெட்டி கொலை.. முன்னாள் ஊழியர் வெறிச்செயல்!
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ என இருவரும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் மிகவும் கொடூரமான இரட்டை கொலை சம்பவம் இப்போது அரங்கேறியுள்ளது. பெங்களூர் பல டெக் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தலைமையிடமாக இருப்பது அனைவருக்கும் தெரியும்.
இதற்கிடையே அங்கே ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் அலுவலகத்திலேயே இந்த கொடூர கொலை அரங்கேறியுள்ளது.

கர்நாடகா: பெங்களூரின் வடகிழக்கு பகுதியான பம்பை எக்ஸ்டென்ஷனில் உள்ள ஃபைபர் ஆப்டிக் இன்டர்நெட் நிறுவனமான ஏரோனிக்ஸ் இன்டர்நெட் பிரைவேட் லிமிடெட் அலுவலகத்தில் இந்த படுகொலை நடந்துள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஃபனிந்திர சுப்ரமணி, சி.இ.ஓ. வினு குமார் ஆகியோரை 3 பேர் கொண்ட கும்பல் வாள் மற்றும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அதே நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழியரே இந்த தாக்குதல் நடத்தியுள்ளார்.
ஹெப்பல் கெம்பாபுரா என்ற பகுதியில் இன்று மாலை 4- 4.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நிர்வாக இயக்குநரும் சிஇஓவும் கட்டிடத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது மாடியில் இருந்த நிலையில், அங்கேயே அவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கொலையாளி: இந்த கொடூர இரட்டைக் கொலையை டிக்டாக் பிரபலம் ஜோக்கர் பெலிக்ஸ் என்பவர் செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். முன்பு பெலிக்ஸ் இதே ஏரோனிக்ஸ் இன்டர்நெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இருப்பினும், சில காலத்திற்கு முன்பு இங்கிருந்து வெளியே அவர் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். தனது ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்குப் போட்டியைத் தடுக்கவே அவர் சுப்பிரமணி மற்றும் குமாரை கொலை செய்திருக்கலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து நகரின் கூடுதல் போலீஸ் கமிஷனர் ராமன் குப்தா கூறுகையில், "இரண்டு பேரை உடன் அழைத்து வந்த பெலிக்ஸ், கொலை செய்யப்பட்ட இருவரையும் தனித்தனியாக சந்தித்துள்ளார் என்பதே முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. பெலிக்ஸை முன்பே தெரியும் என்பதால் கொலை செய்யப்பட்ட இருவரும் சந்தேகமடையவில்லை. சொல்லப்போனால் இருவரும் பெலிக்ஸுடன் வழக்கம் போலவே பேசிக் கொண்டே இருந்துள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

என்ன நடந்தது: கொலை செய்யப்பட்ட இருவரையும் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு தலையிலேயே தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம் என்று குப்தா தெரிவித்தார். மேலும் தொழில் போட்டி இந்த கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறோம். இருப்பினும், கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
கொலை செய்யப்பட்டோரின் உடல்கள் இப்போது பிரேத பரிசோதனைக்காக ஹெப்பலில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் கொலையாளிகளைக் கண்டறிய 4 தனிப்படைகளை போலீசார் அமைத்துள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களைக் கண்டறியும் முயற்சியில் இவர்கள் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications