"வேண்டாம் இந்த விபரீதம்.." 70 மணி நேர வேலை ரொம்பவே ஆபத்து.. நாராயண மூர்த்திக்கு பிரபல டாக்டர் பதில்
பெங்களூர்: இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று இன்போசிஸ் நாராயண மூர்த்தி கூறிய கருத்துக்கு மருத்துவர் ஒருவர் பதிலளித்துள்ளார்.
நாம் வேலை செய்யும் நேரம் என்பது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. போட்டி அதிகரித்துள்ள நிலையில், நீண்ட நேரம் வேலை செய்வதும் தவிர்க்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

வேலை செய்யும் நேரம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதனால் பல்வேறு உடல் மற்றும் மன ரீதியான பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
சர்ச்சை: இந்தச் சூழலில் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி சமீபத்தில் இது தொடர்பாகக் கூறிய கருத்துகள் சர்ச்சையானது அதாவது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாராயண மூர்த்தி, "மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் வேலை உற்பத்தித் திறன் குறைவாக உள்ளது. மற்ற உலக நாடுகளுடன் போட்டிப் போட நாம் தயாராக வேண்டும்.. நமது இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும்" என்றார்.
நாராயண மூர்த்தியின் இந்தக் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்துள்ளன. ஒலா நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட சிலர் நாராயண மூர்த்தியின் கருத்தை வரவேற்றுள்ளனர். அதேநேரம் பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிராகவே கருத்து கூறியுள்ளனர். குறிப்பாக 70 மணி நேரம் வேலை செய்தால் குடும்பத்தினருடன் சுத்தமாக நேரத்தைச் செலவிட முடியாது என்பதே அவர்கள் முன்வைக்கும் வாதமாக இருக்கிறது.
எச்சரிக்கை: மேலும், இதனால் மருத்துவ ரீதியாகவும் கூட பிரச்சினை ஏற்படலாம் என்று சிலர் எச்சரித்துள்ளனர். அதிகப்படியாக வேலை செய்வது மனநலன் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அப்போதே நாராயண மூர்த்தியின் கருத்துகளுக்குப் பலரும் பதிலளித்தனர். இதற்கிடையே பெங்களூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் மூத்த இதய நோய் வல்லுநராக பணியாற்றும் தீபக் கிருஷ்ணமூர்த்தியும் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இருக்கிறது. அதில் நீங்கள் வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்தால்.. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். மீதமுள்ள 12 மணி நேரத்தில் தூக்கத்திற்கு 8 மணி நேரம் அவசியம்.. இப்போது மீதம் நமக்கு 4 மணி நேரம் உள்ளது.. பெங்களூரு போன்ற நகரத்தில் வேலைக்குச் சென்று வரவே 2 மணி நேரம் ஆகும்.
நேரம் இருக்காது: மீதம் இரண்டு மணி நேரம் இருக்கிறது. அது குளிப்பது, சாப்பிடுவது போன்ற அன்றாட பணிகளுக்குத் தேவைப்படும். இப்படி இருந்தால் நம்மைச் சுற்றி இருப்போருடன் பழக நேரம் இருக்காது.. குடும்பத்துடன் பேச நேரம் இருக்காது.. உடற்பயிற்சி செய்ய நேரம் இருக்காது.. பொழுதுபோக்கிற்கு நேரம் இருக்காது..
வேலை செய்யும் நேரத்தைத் தாண்டியும் மெயில்களுக்கு ஊழியர்கள் பதில் அளிக்க வேண்டும் என்றே இப்போது பெரு நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. அப்படியிருக்கும் போது இளைஞர்களுக்கு ஏன் மாரடைப்பு ஏற்பாடு" என்று அவர் பதிவிட்டுள்ளார். இவரது ட்வீட் இணையத்தில் டிரெண்டாகும் நிலையில் பலரும் இந்த மருத்துவரின் கருத்தை ஏற்றுக் கொண்டனர்.
பதில்: இருப்பினும், சிலர் நாட்டின் வளர்ச்சிக்காகவே நாராயண மூர்த்தி அப்படிச் சொன்னதாகவும் கூறினார். அதற்கும் மருத்துவர் தீபக் கிருஷ்ணமூர்த்தி பதிலளித்துள்ளார். அதாவது வேலைவாய்ப்புகளை இரட்டிப்பாக்கினால் போதும்.. அப்போது வேலையின்மை குறையும். இதன் மூலம் பொதுமக்கள் குறைவான நேரம் வேலை செய்தாலே நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications