"அதிக செல்லம் ஆபத்தானது".. பெற்ற மகளை துடிக்க துடிக்க.. கொலை செய்த தந்தை.. என்னாச்சு?
வீட்டில் அராஜகம் செய்து வந்த மகளை தந்தை அடித்துக் கொன்ற சம்பவம் பெங்களூரில் நடந்திருக்கிறது.
பெங்களூர்: பிள்ளைகளுக்கு அதிகம் செல்லம் கொடுப்பதால் என்னென்ன ஆபத்துகள் வரும் என்பதை பெங்களுரில் நடந்திருக்கும் ஒரு பயங்கர சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
மகளின் போக்கை கண்டித்தும், அவரது அராஜகத்தை பொறுத்து பொறுத்தும் போன தந்தை ஒருவர் கடைசியில் இப்படியொரு விபரீத செயலை செய்துள்ளார்.
தற்போது அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.. குழந்தை மீதான அதீத பாசம்தான் ஒரு கொலை வரை சென்றிருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? வாருங்கள் பார்க்கலாம்.

அதிக செல்லம்
கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ரமேஷ் - கீதா தம்பதி. இவர்களுக்கு ஆஷா (27) என்ற மகள் இருக்கிறார். ரமேஷ் கீதா தம்பதிக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் கழித்து ஆஷா பிறந்திருக்கிறார். இதனால் குழந்தை மீது ரமேஷும், கீதாவும் அளவுகடந்த பாசத்தை வைத்தனர். குழந்தை என்ன சேட்டை செய்தாலும் பெற்றோர் கண்டிக்காமல் செல்லம் கொடுத்து வந்திருக்கின்றனர். ஆனால், அதுவே அவர்களுக்கு வினையாக தொடங்கியது.

மகளின் சுயரூபம்
அப்பா அம்மாவின் அதீத செல்லத்தால் கண்டிப்பு என்றால் என்னவென்றே தெரியாமல் ஆஷா வளர்ந்திருக்கிறார். இதனால் பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பது; நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது என எந்த நல்ல பழக்கமும் ஆஷாவிடம் இல்லாமல் இருந்திருக்கிறது. மேலும், ஆசிரியர்களை திட்டும் அளவுக்கும், கை ஓங்கும் அளவுக்கும் சென்றிருக்கிறார் ஆஷா. இதனால் பள்ளி, கல்லூரியிலும் அவருக்கு கெட்ட பெயர் கிடைத்திருக்கிறது. இதுகுறித்து பெற்றோர் ஏதாவது கூறினால் அவர்களை எடுத்தெறிந்து பேசுவது என ஆஷாவின் ஆட்டம் அளவு மீறி சென்றிருக்கிறது. தாங்கள் செல்லம் கொடுத்ததால்தான் மகள் இப்படி ஆகிவிட்டாள் என்பதை உணர்ந்த பெற்றோர், கல்லூரி காலத்தில் அவரை கண்டிக்க தொடங்கினர். அப்போதுதான் ஆஷாவின் சுயரூபம் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

தாய் தந்தைக்கே அடி உதை
இதுவரை யாரிடமும் எந்த திட்டும் வாங்காத ஆஷாவுக்கு பெற்றோர் கண்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால், ஒருகட்டத்துக்கு பெற்றோரை ஆஷா அடித்து உதைக்க தொடங்கிவிட்டார். வயதான அவர்களால் ஆஷாவை எதிர்த்து ஒன்றும் செய்யவும் முடியவில்லை. இதனிடையே, ஆஷா தனது பெற்றோர் பேச்சை மீறி சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், கணவர் வீட்டாருடன் வாழ பிடிக்கவில்லை எனக் கூறி மீண்டும் தனது பெற்றோர் வீட்டுக்கே வந்துவிட்டார் ஆஷா. ஆனால், அதன் பிறகு ஆஷாவின் போக்கு மேலும் மோசமானது. நண்பர்களுடன் வெளியே செல்வது; இரவு மது அருந்திவிட்டு மிக தாமதமாக வீடு திரும்புவது என ஆஷா அராஜகத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

தந்தை செய்த காரியம்
இதனை பெற்றோர் கண்டித்தால் அவர்களை சரமாரியாக தாக்கியும் வந்திருக்கிறார் ஆஷா. ஆஷாவின் இந்த அராஜகத்தை சகிக்க முடியாத தந்தை ரமேஷ், இப்படியொரு மகளே தனக்கு வேண்டாம் என முடிவு செய்துவிட்டார். அதன்படி, நேற்று நள்ளிரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த ஆஷா, தனது அறைக்கு தூங்க சென்றார். இதனைத் தொடர்ந்து, வீட்டில் இருந்த விறகு கட்டையை எடுத்து ஆஷாவின் அறைக்குள் நுழைந்த தந்தை ரமேஷ், மகளை சரமாரியாக அடித்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆஷா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், காவல் நிலையத்துக்கு போன் செய்த ரமேஷ் நடந்த விஷயங்களை கூற, போலீஸார் அங்கு வந்து அவரை கைது செய்தனர். தவமாய் தவமிருந்து பெற்று அதிக செல்லம் கொடுத்து வளர்த்த மகளை, தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications