விவசாயி தற்கொலை.. வக்ஃப் வாரியத்தை கைக்காட்டிய பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மீது அதிரடி வழக்கு
பெங்களூர்: கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்பியும், பாஜகவின் இளைஞர் அணியின் தேசிய தலைவருமான தேஜஸ்வி சூர்யா மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் விவசாயி தற்கொலைக்கு வஃக்ப் வாரியம் நிலத்தை கைப்பற்றியது தான் காரணம் என்று தவறான தகவல் பரப்பிய புகாரில் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெங்களூர் தெற்கு லோக்சபா தொகுதி பாஜக எம்பியாக இருப்பவர் தேஜஸ்வி சூர்யா. அடிப்படையில் வழக்கறிஞரான இவர் 2வது முறையாக அந்த தொகுதியில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பாஜகவின் இளைஞர் அணியின் தேசிய தலைவராகவும் உள்ளார்.

பாஜகவில் வளர்ந்து வரும் இளம் தலைவராக தேஜஸ்வி சூர்யா அறியப்படுகிறார். இந்நிலையில் தான் தேஜஸ்வி சூர்யா மீது கர்நாடகா போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கு அவர் விவசாயி தற்கொலையில் தவறான தகவலை பரப்பியது தான் காரணம். அதாவது கர்நாடகாவில் ஹாவேரி என்ற மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ருத்ரப்பா சென்னப்பா பலிகை என்பவர் சமீபத்தில் தனது நிலத்தில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி முடித்தனர். விவசாய கடன் மற்றும் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் அவர் இறந்ததாக போலீசார் கூறினர்.
இதற்கிடையே தான் நேற்று, தேஜஸ்வி சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் சித்தராமையா மற்றும் வஃக்ப் வாரிய அமைச்சர் ஜமீர் அகமது கான் ஆகியோரை குற்றம்சாட்டியிருந்தார். அதாவது விவசாயி ருத்ரப்பா சென்னப்பா பலிகையின் நிலத்தை வஃக்ப் வாரியம் கையகப்படுத்தி உள்ளது. இதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா, அமைச்சர் ஜமீர் அகமது கான் ஆகியோர் பேரழிவை கட்டவிழ்த்து உள்ளனர் எனக்கூறியிருந்தார்.
இது சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து ஹவேரி மாவட்ட எஸ்பியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இருந்து தேஜஸ்வி சூர்யாவின் பதிவுக்கு பதிலளிக்கப்பட்டு இருந்தது. அதில் ‛‛விவசாயி ருத்ரப்பா சன்னபா பலிகை தற்கொலை என்பது கடன் மற்றும் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் நடந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது பரவும் தகவல் பொய்யானது'' என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து தேஜஸ்வி சூர்யா தனது பதிவை டெலிட் செய்தார். அதுமட்டுமின்றி தேஜஸ்வி சூர்யா, ‛‛தகவலுக்கு நன்றி. ட்வீட் நீக்கப்பட்டது. இனிமேல் இந்த சம்பவத்தில் புகாரளித்தவர்களை நம்ப போவதில்லை. மாநிலம் முழுவதும் உள்ள 1000 விவசாயிகளுக்கு வஃக்ப் மாற்றுதல் நோட்டீஸ்கள் பரவி வருகிறது. இதனால் இதுபோன்ற தகவலை எளிதில் நம்பும் படியாக ஆகிவிடுகிறது'' என்று கூறியிருந்தார். இருப்பினும் தவறான தகவல் பரப்பிய புகாரில் தேஜஸ்வி சூர்யா மீது ஹாவேரி போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications