மாறாத பழைய பாசம்.. பாஜகவில் சேர்ந்ததை, கன்னடத்திலும் ட்வீட் செய்த அண்ணாமலை
பெங்களூர்: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜகவில் நேற்று தன்னை இணைத்துக் கொண்டவருமான அண்ணாமலை, கன்னடத்தில் ட்வீட் செய்து, பாஜகவில் இணைந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
கர்நாடகாவில் ஐபிஎஸ் கேடராக பணிகிடைத்து பதவி வகித்தவர் அண்ணாமலை. கடந்த வருடம் மே மாதம் திடீரென பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அவருக்கு பெங்களூர் தெற்கு மண்டல காவல்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் பேசிய அவர், உயிர் உள்ளவரை, இறுதி மூச்சு உள்ளவரை நான் பெருமைமிக்க கன்னடர் என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.

ஆங்கிலமே போதுமே
இந்த நிலையில், கட்சியில் தான் இணைந்த அறிவிப்பை, ஆங்கிலம், தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய 3 மொழிகளில் ட்வீட்டாக வெளியிட்டுள்ளார். தமிழ், ஆங்கிலம் ஓகே. தமிழகத்தில் அரசியல் செய்யப்போகிறவர் எதற்காக கன்னடத்திலும் ட்வீட் செய்தார், கர்நாடக மாநில அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் புரிய ஆங்கிலமே போதுமே என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அனைத்து மொழிகளிலும் ஒரே விஷயத்தைதான் கூறியுள்ளார்.

மோடி தொலை நோக்கு பார்வை
இதோ அவரது ட்வீட்: நான் அதிகாரப்பூர்வமாக டெல்லியில் வைத்து, பாஜக கட்சியில் சேர்ந்து உள்ளேன். பிரதமர் நரேந்திர மோடியின் இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வையையும் ஆற்றல்மிக்க தலைமையையும் என்னை எப்போதும் ஈர்த்துள்ளன. நமது பிரதமரின் தலைமையில் உலக அரங்கில் இந்தியா ஆற்றல் வாய்ந்த சக்தியாக உருவெடுத்து வருகிறது.

தோளோடு தோள்
லட்சக்கணக்கான மக்களை வறுமையின் பிடியில் இருந்து அகற்றி, நம் உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்களில் சமரசம் செய்யாமல், நமது விவசாயிகளுடன் தோளோடு தோள் நின்று, நம் நடுத்தர வர்க்கத்தை செழிக்க செய்வதில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளோம்.

பெருமை
இந்த நாட்டின் சாதாரண மனிதர்கள் மற்றும் அவர்களின் அபிலாசைகளை சுமந்து நிற்கும் ஒரு கட்சியில் உறுப்பினராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். இந்த கட்சி எப்போதுமே நம் தேசத்தைப் பற்றிய எண்ணத்தை மையமாகக் கொண்டு நாம் அனைவரும் பெருமை கொள்ளக்கூடிய ஒரு நாட்டை உருவாக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

கர்நாடக மக்களுக்கு சேவை
ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடக மக்களுக்கு சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. தற்போது இக்கட்சி தமிழகத்துக்கும் நமது தேசத்துக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை எனக்குக் கொடுத்திருக்கிறது. டெல்லியில் இருக்கும் சரியான தலைவர்களின் வழிகாட்டுதலால், நமது நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, மோடி தலைமையிலான நமது நாடு, அதன் சரியான இலக்கை அடைவதற்காக நான் உண்மையில் ஆர்வமாய் இருக்கிறேன். நமக்குரிய முன்னேற்றம் மற்றும் வெற்றி இன்னும் சிறிது காலத்தில். அந்த இலக்கை நாம் நம் நாடு அடைய நானும் ஒரு சிறிய பங்காற்ற விரும்புகிறேன். ஜெய்ஹிந்த்.












Click it and Unblock the Notifications