5 ஆண்டுகளில் 90 முறை நடிகை ரன்யா ராவ் துபாய் பயணம்- தங்க கடத்தல் விசாரணை வளையத்தில் சென்னை ஏர்போர்ட்
பெங்களூர்: தங்கக் கடத்தல் தொழிலில் மகாராணியாக வலம் வந்த நடிகை ரன்யா ராவ், 5 ஆண்டுகளில் 90 முறை துபாய் பயணம் மேற்கொண்டதாகவும் இந்த கடத்தல் விவகாரத்தில் சென்னை, ஹைதராபாத், மும்பை விமான நிலையங்களிலும் விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும் மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கர்நாடகாவில் 12 கிலோ தங்க கட்டிகளை தொடையில் கட்டி வைத்து கடத்தி வந்த போது சிக்கினார் நடிகை ரன்யா ராவ். இவர் தமிழில் வாகா படத்தில் அறிமுகமானார். இவரது வளர்ப்புத் தந்தை கர்நாடகா மாநில டிஜிபி.

நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது வளர்ப்பு தந்தை டிஜிபி மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நடிகை ரன்யா ராவ் கணவரையும் வருவாய் நுண்ணறிவுப் போலீசார் விசாரிக்கின்றனர். ஆனால் ரன்யா ராவ் கணவரோ, தாம் ஒரு மாதம்தான் குடும்பம் நடத்தினேன்; அதன் பிறகு பிரிந்துவிட்டேன் என கூறி வருகிறார்.
இந்த நிலையில் நடிகை ரன்யா ராவின் தங்க கடத்தல் ராஜ்ஜியம் தொடர்பாக பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு முதல் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 90 முறை துபாய்க்கு சென்று வந்துள்ளாராம் ரன்யா ராவ்; மேலும் துபாயில் இருந்து தங்கம் கடத்துவதற்காகவே நகை கடையை அங்கே நடத்தி வந்தும் இருக்கிறார் ரன்யா ராவ். அத்துடன் சென்னை, மும்பை, ஹைதராபாத் விமான நிலையங்கள் வழியாகவும் பல முறை தங்கக் கட்டிகளை ரன்யா ராவ் கடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னை, மும்பை, ஹைதராபாத் விமான நிலையங்களிலும் மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே ரன்யா ராவ் விவகாரத்தில் வளர்ப்புத் தந்தை டிஜிபியின் தொடர்பு குறித்து விசாரிக்க கர்நாடக மாநில அரசு உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு, டிஜிபியிடம் 3 மணிநேரத்துக்கும் மேலாக துருவி துருவி விசாரணை நடத்தியது. இந்த குழுவின் விசாரணை அறிக்கை இன்று மாநில அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த அறிக்கையின் விவரங்கள், ரன்யா ராவ் தங்க கடத்தல் விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications