சென்னபட்னாவில் குமாரசாமி வெற்றி! கிங்மேக்கராவதில் தோல்வி! ராம்நகராவில் மண்ணை கவ்விய நிகில்
பெங்களூர்: கர்நாடகா முன்னாள் முதல்வரும் ஜேடிஎஸ் கட்சியின் தலைவருமான எச்.டி.குமாரசாமி சென்னபட்னா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் மகன் நிகில் குமாரசாமி தோல்வி அடைந்தார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. 224 தொகுதிகளுக்கும் இந்த வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில் பாஜக 64 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 134 இடங்களிலும் ஜேடிஎஸ் 19 இடங்களிலும் வென்றுள்ளது. மேலும் 3 தொகுதிகளில் காங்கிரஸ் இரு இடங்களிலும் பாஜக ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.

இதில் முன்னாள் முதல்வர் எச் டி குமாரசாமி சென்னபட்னா தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அந்த தொகுதியில் குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியானது பெங்களூர் பகுதி, ராம்நகர் மாவட்டத்திற்குள்பட்டது.
இது பெங்களூர் ஊரக லோக்சபா தொகுதியாகும். இந்த தொகுதியில் எஸ்சி பிரிவினரின் மக்கள் 17.43 சதவீதம் பேர் உள்ளனர். அது போல் பழங்குடியினர் 0.46 சதவீதம் பேர் உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு குமாரசாமி 87,995 வாக்குகளை பெற்று யோகேஸ்வராவை தோற்கடித்தார். யோகேஸ்வரா அந்த தொகுதியில் 66,465 வாக்குகளை பெற்றார்.
கடந்த 1999 ஆம் ஆண்டு சென்னபட்ணாவில் சுயேச்சையாக களமிறங்கி வென்றவர் யோகேஸ்வரா. அதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு 2008 ஆம் ஆண்டு ஆகிய சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வென்றார். 2013 ஆம் ஆண்டு சமாஜ்வாடி கட்சி உறுப்பினராக போட்டியிட்ட யோகேஸ்வர் வென்றார்.
சென்னபட்ணா தொகுதியில் ஓக்கலிகா வாக்குகள் அதிகம் உள்ளன. சென்னபட்னா தொகுதியில் குமாரசாமி பாஜக வேட்பாளர் யோகேஸ்வராவைவிட 15 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வென்றுள்ளார். இந்த நிலையில் ராம்நகரா தொகுதியில் போட்டியிட்ட குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி தோல்வி அடைந்துவிட்டார். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இக்பாலிடம் நிகில் தோல்வி அடைந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நிகில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் சுமலதா அம்பரீஷிடம் தோற்றார். இந்த ராம்நகரா தொகுதியை கடந்த 2018ஆம் ஆண்டு எச்.டி. குமாரசாமி காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் ஹுசைனை தோற்கடித்தார்.
கர்நாடகாவில் ஜேடிஎஸ் கட்சியின் குமாரசாமி பெரும்பாலும் கிங்மேக்கராக இருப்பார். கடந்த முறையும் அப்படித்தான் நடந்தது. குறைந்த சீட்டுகள் வென்றிருந்த போதிலும் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். அதே போல் இந்த முறையும் தொடரும் என எதிர்பார்த்த நிலையில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications