சிறையில் இருக்கும் ஹரி நாடார் மீண்டும் கைது.. தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து விசாரிக்க திட்டம்?
பெங்களூர் : பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்து வரும் ஹரி நாடார், மேலும் ஒரு மோசடி வழக்கில் நெல்லை போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த ஜமாலுதீன் என்ற தொழிலதிபர், ஹரி நாடார் மீது மோசடி புகார் ஒன்றை திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் கொடுத்திருந்தார்.
புகார் அளித்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் இருந்து வரும் ஹரி நாடாரை மீண்டும் கைது செய்தனர்.

ஹரி நாடார்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி நாடார், சென்னையில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவர் கழுத்து, கை, விரல் என்று உடல் முழுவதும் நகைகள் அணிந்திருப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். கிலோ கணக்கில் நகைகள் அணிந்து வந்து வலம் வந்ததாலேயே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமும் அடைந்தார். இவரை நடமாடும் நகைக்கடை என்றே பலரும் அழைத்து வந்தனர். ராக்கெட் ராஜாவின் பனங்காட்டுப்படை கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டு வந்த அவர், தேர்தலிலும் போட்டியிட்டு வந்தார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் போட்டியிட்டு 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

சிறையில் அடைப்பு
தேர்தல் முடிந்ததும் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். ஹரி நாடார் மீது அவரது மனைவி நெல்லை காவல் கண்காணிப்பாளர்கள் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் மலேசியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தன்னை மிரட்டுகிறார் என்று கூறியிருந்தார். மேலும், பனங்காட்டுப்படை கட்சியிலிருந்து ஹரி நாடாரை நீக்கம் செய்த ராக்கெட் ராஜாவும், பல்வேறு குற்றச்சாட்டுகளை போலீசில் தெரிவித்திருந்தார்.

மோடி புகார்
இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த வழக்குகள் ஹரி நாடார் மீது பதிவு செய்யப்பட்டது. இதனால் ஹரி நாடார் ஜாமீன் கிடைக்காமல் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ஹரி நாடார் மீண்டும் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த ஜமாலுதீன் என்பவர் கொடுத்த மோசடி புகாரின் பேரில் நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசார் ஹரி நாடாரை பரப்பன அக்ரஹாரா சிறையில் வைத்து கைது செய்துள்ளனர்.

மீண்டும் கைது - நெல்லையில் ஆஜர்?
இதற்கான ஆவணங்களும் சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் இந்த வழக்கில் நெல்லை போலீசார் ஹரி நாடாரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களுக்குள் ஹரி நாடார் திருநெல்வேலி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து ஹரி நாடார் ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு வழக்கில் அவரை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications