ஹிஜாப்: துருக்கி, தென் ஆப்பிரிக்கா.. பல நாட்டு சம்பவங்களை குறிப்பிட்டு ஹைகோர்ட்டில் அனல் பறந்த வாதம்
பெங்களூர்: ஹிஜாப்பை தடை செய்வதற்கு நாம் துருக்கியில் வாழவில்லை என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மாணவிகள் தரப்பு வக்கீல் தேவ்தத் காமத் வாதாடினார்.
கர்நாடகத்தில் ஹிஜாப், காவி ஷால் போராட்டம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உடுப்பியில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து துவங்கிய இந்த பிரச்னை படிப்படியாக பிற மாவட்டங்களுக்கும் பரவியது.
சிக்கமகளூரு, மண்டியா, சிவமொக்கா, பாகல்கோட்டை உள்பட பிற மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போட்டி போராட்டம் நடத்தினர். கர்நாடகத்தில் சில கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளில் சீருடையை கட்டாயமாக்க வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டது.

வழக்கு
ஹிஜாப் தடையை எதிர்த்து உடுப்பி மாவட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி கிருஷ்ணா தீட்சித் விசாரணை நடத்தினார். அதன்பிறகு இந்த வழக்கு மூவர் பெஞ்சுக்கு மாற்றம் செய்யப்பட்டது. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி அமர்வு விசாரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இந்த அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டும். வழக்கு நிலுவையில் உள்ளதால் மதம் சார்ந்த ஆடைகளை மாணவ-மாணவிகள் அணிய கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

4 வது நாள் விசாரணை
இதற்கிடையே நேற்று 4வது நாளாக மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. குந்தாபுரா மாணவிகள் சார்பாக மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத் ஆஜரானார். இவர் வெளிநாடுகளில் வழங்கிய தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதம் செய்தார். இவரது வாதத்தின் சில முக்கிய அம்சங்கள் வருமாறு:

மூக்குத்தி வழக்கு
‛‛வெளிநாடுகளில் மதம், மதம்சார்ந்த அடையாளங்களை பின்பற்ற நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2004ல் தென்ஆப்பிரிக்கா பள்ளியில் ஹிந்து மாணவி சுனாலி பிள்ளை மூக்குத்தி அணிந்திருந்தார். இதற்கு பள்ளி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. பள்ளி நடத்தை விதிகளை மீறுவதாக குறிப்பிட்டது. மூக்குத்தி 2 ஆண்டுகளாக அணிந்து இருப்பதாகவும், இது அரசியலமைப்பு உரிமை எனவும் மாணவி கூறி வழக்கு தொடர்ந்தார். இதில் மூக்குத்தி அணிய உத்தரவு கிடைத்தது. இந்த வழக்கின்போது மூக்குத்தி அணிவது என்பது சுனாலியின் மதம் அல்லது கலாசாரம் சார்ந்தது இல்லை என்பதற்கான ஆவணங்கள் இருந்தாலும், அது தென்இந்தியாவில் பெண்களின் கலாசாரம், நம்பிக்கைக்கு உரித்தானது. பொதுவெளியில் இன்னொருவரை துன்புறுத்தாத ஒருவரின் அதீத நம்பிக்கையை குறைத்து மதிப்பிடக்கூடாது'' என தென்ஆப்பிரிக்கா நீதிமன்றம் உத்தரவிட்டது என்றார்.

பன்முகத்தன்மையின் அடையாளம்
மேலும் ‛‛சீருடையில் விலக்கு கோரினால் அதற்கு பரிசீலித்து இடமளிப்பது அரசு, பள்ளியின் கடமை. இதில் மாணவர்களை தண்டிக்க கூடாது'' எனக்கூறி மூக்குத்தி அணிய அனுமதி வழங்கினார். இதன் அடிப்படையில் சீருடையுடன் ஹிஜாப் அணிய உத்தரவிட வேண்டும். மேலும், "மதம் மற்றும் கலாச்சாரத்தை பொதுவெளியில் காட்டுவது பன்முகத்தன்மையின் அடையாளமாகும். இது நமது பள்ளிகளையும், நம் நாட்டையும் வளப்படுத்தும்'' என்றார்.

தடை செய்ய இயலாது
இதுதவிர, ‛‛சட்டம் ஒழுங்கு பிரச்னையை மேற்கோள் காட்டி பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் தடை செய்வதாக அரசு கூறுவது. இது ஹெக்லர், வீட்டோ வழக்கு போன்றது'' எனக்கூறியவர் ஹெக்லர், வீட்டோ வழக்கு பற்றி எடுத்து கூறினார். ‛‛நான் தெருவில் நடந்து செல்வதை பிடிக்கவில்லை என்று ஒருவர் புகார் கூறும்போது, அது பொது ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துவதாக கூறி நான் நடப்பதை அரசால் தடை செய்ய இயலாது'' என்றார்.

துருக்கியில் வாழவில்லை
மேலும் ‛‛அடிப்படை உரிமைகளை அமல்படுத்துவதற்கான சூழ்நிலையை உருவாக்க அரசுக்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். ஏனென்றால் நாம் துருக்கியில் வாழவில்லை. அங்கு பொது வெளியில் மத அடையாளங்களை காட்டக்கூடாது. ஹிஜாப்புக்கு தடை விதிப்பது என்பது துருக்கி நிலைப்பாட்டை இந்தியாவில் தூக்கி பிடிப்பது போன்றதாகிவிடும்.

நேர்மறையான மதசார்பின்மை
துருக்கியை ஒப்பிடும்போது நமது அரசியலமைப்பு முற்றிலும் மாறுபட்டது. பல்வேறு விதமான நம்பிக்கைகளை பின்பற்ற நமது அரசியலமைப்பு இடமளிக்கிறது. நமது மதசார்பின்மை நேர்மறையானது. அனைத்து சமூகத்தினரின் அடிப்படை உரிமைகள் மற்றும் மத சுதந்திரத்தை பயன்படுத்த மாநிலங்கள் அனுமதிக்கிறது. எனவே மத அடையாள ஆடைகளோடு செல்லக்கூடாது என உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீக்க வேண்டும்'' என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணைக்கு இன்று மதியம் 2:30 மணிக்கு ஒத்திவைத்தார். அதன்படி இன்று விசாரணை துவங்க உள்ளது.

9 மாவட்டங்களில் தடை
இதற்கிடையே நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று முன்தினம் கர்நாடகத்தில் 10 வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டன. இன்று பியூ, டிகிரி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையாக கர்நாடக பெங்களூரு, ஷிமோகா, உடுப்பி, தும்கூர், பெங்களூரு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் கல்லூரிகளை சுற்றி 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் அருகே வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
