ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை.. ஹைகோர்ட் பதிவாளரிடம் கோரிக்கை
பெங்களூர்: ஹிஜாப் தீர்ப்பு தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம், நீதிபதிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்கள் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன. சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது.
பெரும் சர்ச்சையான நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. இதற்கிடையே ஹிஜாப் தடையை நீக்ககோரி உடுப்பி மாணவிகள் சார்பில் பெங்களூரில் உள்ள கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

உயர்நீதிமன்றம் தீர்ப்பு
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி அமர்வு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியது. ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல எனக்கூறிய உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனக்கூறி கர்நாடக அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்புக்கு எதிர்ப்பு
இதை கண்டித்து பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். மேலும் கர்நாடகத்தில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் நீதிபதிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்கள் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளரிடம், வழக்கறிஞர் அம்ருதேஷ் மனு அளித்துள்ளார்.

மனுவில் இருப்பது என்ன
அந்த மனுவில், ‛‛தீர்ப்பு தொடர்பாக பல்வேறு அமைப்புகள் கர்நாடக உயர்நீதின்றத்தை விமர்சிப்பது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. இது நீதிமன்றத்தின் மரியாதையை குறைக்கிறது. இதனால் அவர்கள் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது. மேலும் மனுவில், ‛‛கர்நாடக மாணவர் சங்கம், இந்திய இஸ்லாம் மாணவர்களுக்கான அமைப்பு (கர்நாடகம்), எஸ்சிஎம்ஐ, தலித் மாணவர் பரிஷத்(கர்நாடகம்), கலெக்ட்டிவ் (பெங்களூர்), இஸ்லாமிய பெண்கள் அமைப்பு(கர்நாடகம்), சாகீர் அமது ரசாதியின் கர்நாடக இமாரத் இ-ஷாரியா உள்பட பிற அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறப்பட்டு உள்ளது.

மேல்முறையீடு
இதற்கிடையே கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து 6 மாணவிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே கூறியதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. ஹோலி விடுப்புக்கு பின் விசாரிக்கப்படும் என நீதிமன்றம் கூறியது. இதனால் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications