ஹிஜாப்புக்கு பதில்.. இதை செய்யலாம்.. பிரச்சினை ஓவர்.. கர்நாடக அரசுக்கு மதகுரு கொடுத்த ஐடியா!
பெங்களூர்: கர்நாடக பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹிஜாப்புக்கு பதில் துப்பட்டா பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என அமீர் இ ஷரியத் தலைவரும், மதகுருவான ஷாகீர் அகமது கான் ரஷாதி கர்நாடக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகத்தில் கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து செல்ல கர்நாடக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து மார்ச் 15ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில் ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல எனக்கூறிய உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனக்கூறி கர்நாடக அரசின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டது.

முழுஅடைப்பு
இந்த தீர்ப்புக்கு முஸ்லிம் அமைப்பினர், தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். மேலும் கர்நாடகத்தில் அமீர் இ ஷரியத் அமைப்பின் சார்பில் மார்ச் 17 ல் கர்நாடகத்தில் பந்த் நடத்தப்பட்டது. கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் மக்கள் சார்பில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

ஆலோசனை
இந்நிலையில் அமீர் இ ஷரியத் தலைவர் ஷாகீர் அகமது கான் ரசாதி ஹிஜாப் தடை தொடர்பாக பல்வேறு அரசியல் பிரமுகர்கள், முஸ்லிம் அமைப்பினருடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று கர்நாடக எதிர்க்கட்சி(காங்கிரஸ்) தலைவர் சித்தராமையாவை சந்தித்து பேசினார். அப்போது அவர் ஹிஜாப் தடை குறித்து விவாதித்தார்.

‛துப்பாட்டா’வை அனுமதியுங்க
அதன்பின் ஷாகீர் அகமது கான் கூறுகையில், ‛‛கர்நாடகத்தில் கல்லூரிகளில் ஹிஜாப், புர்கா ஆகியவற்றுக்கு மாற்றாக முஸ்லிம் மாணவிகள் துப்பட்டாவால் தலையை மறைத்து கொள்ள அனுமதிக்க வலியுறுத்த வேண்டும்'' என அவர் கூறினார். மேலும் இதுதொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்வர்களான சித்தராமையா, குமாரசாமி ஆகியோர் முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் பேச வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

சட்டசபையில் விவாதம்
இதற்கிடையே உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு முஸ்லிம் மாணவிகள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்த தகவல்கள் காங்கிரஸ் சார்பில் திரட்டப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது நடைபெற்று வரும் கர்நாடக சட்டசபையில் இதுதொடர்பாக விவாதம் நடக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

உச்சநீதிமன்றத்தில் மனு
இதற்கிடையே ஹிஜாப் தடை தொடர்பான கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், இன்று முன்கூட்டியே விசாரிக்கவும் மறுப்பு தெரிவித்தது. மேலும் தற்போது வரை மனு மீதான விசாரணை குறித்த தேதியையும் உச்சநீதிமன்றம் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications