மோடியின் செயல்பாடு எப்படி? கர்நாடகாவில் விருப்பமான சி.எம் யார்? சி.வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு
பெங்களூர்: கர்நாடக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்திய ஏபிபி சி வோட்டர் நிறுவனம், பிரதமர் மோடியின் செயல்பாடுகள் எப்படி உள்ளது..கர்நாடகாவில் விருப்பமான முதல்வர் யார் என்பது குறித்தும் மக்களிடம் கருத்து கேட்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. 224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருப்பதால் கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதுவரையிலான கருத்து கணிப்புகள் பாஜக ஆட்சியை இழக்கும் எனவும் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் என்பதாகவே தெரிவித்துள்ளன. ஒருசில கருத்து கணிப்புகள், தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகின்றன.
இந்த நிலையில், ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகின. இதிலும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான கணிப்புகளே வந்துள்ளன. அதாவது, காங்கிரஸ் கட்சி 107 முதல் 119 இடங்களையும் பாஜக 74 முதல் 85 இடங்களையும் பெறும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ள்ன. அதேபோல், ஜேடிஎஸ் கட்சிக்கு 23 முதல் 35 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் எந்த கட்சிக்கு எத்தனை இடம் கிடைக்கும் என்பது மட்டும் இன்றி, பிரதமர் மோடியின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு அதன் முடிவுகளையும் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: -
பிரதமர் மோடியின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதாக 49 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். சராசரியாக இருப்பதாக 18 சதவீதம் பேரும் மோசமாக இருப்பதாக 33 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர். விருப்பமான கர்நாடக முதல்வர் யார்? என்ற கேள்விக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையாவிற்கு அதிக மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான கருத்து கணிப்பு முடிவில், பசவராஜ் பொம்மைக்கு 31 சதவீதமும் சித்தராமையாவிற்கு 41 சதவீத மக்களும் விருப்பமான முதல்வராக குறிப்பிட்டுள்ளனர். அதேபோல், குமாரசாமிக்கு 22 சதவீதம் பேரும் டிகே சிவக்குமாருக்கு 03 சதவீதம் பேரும், பிற தலைவர்களுக்கு 03 சதவீதம் பேரும் கருத்து கூறியுள்ளனர்.
கர்நாடாகாவின் முக்கிய பிரச்சினை என்ன என்பது தொடர்பாகவும் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது.
* வேலை வாய்ப்பு இன்மை -30 சதவீதம்.
* அடிப்படை வசதிகள் - 24 சதவீதம்.
* கல்வி -14 சதவீதம்.
* ஊழல் - 13 சதவீதம்.
* சட்டம் ஒழுங்கு பிரச்சினை - 03 சதவீதம்.
* பிற பிரச்சினைகள்- 16 சதவீதம்.












Click it and Unblock the Notifications