காபி டே நிறுவனர் சித்தார்த்தாவின் உடலை கண்டெடுத்தது எப்படி?.. பரபரப்பு தகவல்கள்
Recommended Video
பெங்களூர்: காபி டே நிறுவனர் சித்தார்த்தாவின் உடல் 36 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டது எப்படி என்பது தெரியவந்துள்ளது.
காபி டே நிறுவனர் சித்தார்த்தாவுக்கு இந்தியா முழுவதும் 1700-க்கும் மேற்பட்ட காபி டே கடைகள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அவர் ஏராளமான தொழில்களை செய்து வந்தார்.
இந்த நிலையில் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது சித்தார்த்தா வரி ஏய்ப்பு செய்ததும் தெரியவந்தது. இதிலிருந்து அவரது தொழில் சாம்ராஜ்ஜியம் சரிய தொடங்கியது.

பேச்சுவார்த்தை முடியவில்லை
சுமார் 7000 கோடி கடனில் சித்தார்த்தா தத்தளித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது நிறுவனத்தை கோகோ கோலா நிறுவனத்துக்கு விற்பனை செய்ய முடிவு செய்து ரூ 10000 கோடிக்கு விலை பேசப்பட்டது. எனினும் அந்த பேச்சுவார்த்தை முற்று பெறவில்லை.

ஆற்றுப்பாலம்
இந்த நிலையில் கடன் கொடுத்தவர்களும் பங்குகளை வாங்கியவர்களும் சித்தார்த்தாவுக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று முன் தினம் தொழில் சம்பந்தமாக மங்களூர் சென்று கொண்டிருந்தார். அப்போது நேத்ராவதி ஆற்றுப்பாலம் அருகே காரை நிறுத்துமாறு கூறினார்.

ஸ்விட்ச் ஆப்
பின்னர் தான் சிறிது நேரம் கழித்து வருவதாகவும் அதுவரை காரில் காத்திருக்குமாறும் டிரைவரிடம் கூறியுள்ளார். அப்போது அவர் செல்போனில் யாருடனோ பேசியபடியே சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் நீண்ட நேரமாகியும் காணாததால் அவரை டிரைவர் தேடியுள்ளார். கிடைக்கவில்லை, செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

தேடும் பணிகள் தீவிரம்
இதனால் பதறிய டிரைவர் உறவினர்கள் மூலம் தக்ஷின கன்னட போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நேற்று முன் தினம் முதல் அவரை தேடும் பணிகள் தீவிரமடைந்தன. எனினும் அவர் கிடைக்கவில்லை.

முயற்சிகள்
இதனிடையே சித்தார்த்தாவை யாரேனும் கடத்தியிருக்கலாம் என காங்கிரஸ் எம்எல்ஏ டிகே சிவக்குமார் தெரிவித்திருந்தார். எனினும் நடுத்தர வயதினர் ஒருவர் ஆற்றில் குதித்ததை பார்த்ததாக மீனவர் ஒருவர் சொன்னதை அடுத்து இன்னும் 600 மீட்டர் தொலைவில் உள்ள அரபிக் கடலிலும் சித்தார்த்தாவை தேட முயற்சிகள் நடந்தன.

சந்தேகம்
இந்த நிலையில் இன்று காலை மீன் பிடித்துவிட்டு சில மீனவர்கள் கரை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது நேத்ராவதி பாலத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் ஒரு உடல் மிதந்து கொண்டிருப்பதை பார்த்தனர். சித்தார்த்தா குறித்து போலீஸார் தேடுவதை அவர்கள் அறிந்திருந்ததால் அந்த உடல் சித்தார்த்தாவுடையதாக இருக்கலாம் என சந்தேகித்தனர்.

ஒப்படைக்கப்படும் உடல்
இதையடுத்து அவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அந்த உடலை மீட்டனர். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். இறந்து கிடந்தது சித்தார்த்தாதான் என குடும்பத்தினர் உறுதி செய்தனர். இதையடுத்து அவரது உடல் மங்களூரில் உள்ள வென்லாக் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.












Click it and Unblock the Notifications