என்ன மனுஷன்யா! பெங்களூர் தொழிலதிபரை கவர்ந்த ரேபிடோ டிரைவர்..அடுத்தடுத்து வந்த போன்காலில் ட்விஸ்ட்
பெங்களூர்: பெங்களூரில் டெலிவரி நிறுவனத்தின் துணை நிறுவனராக உள்ள ஷாகீர் அகமது ரேபிடோ காரை ‛புக்'செய்து பயணித்தார். அந்த சமயத்தில் ரேபிடோ டிரைவர் இடைவிடாது ஸ்பீக்கர் போனில் பேசினார். கார் ஓட்டும்போது போன் பேசுவது ஆபத்தானது என்றாலும் கூட அந்த டிரைவர், தொழிலதிபரின் மனதை கவர்ந்தார். அது எப்படி? அங்கு என்ன நடந்தது? என்பது பற்றி தொழிலதிபர் விளக்கி உள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட போஸ்ட் தற்போது லைக்ஸ்களை அள்ளி வருவதோடு, பலரும் டிரைவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூரை சேர்ந்தவர் ஷாகீர் அகமது. இவர் தொழில்முனைவோராக உள்ளார். Zapper Delivery என்ற நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார். இந்த நிறுவனம் பெங்களூரில் டெலிவரி பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் அலுவலக விஷயத்துக்காக அவர் வெளியே செல்ல முயன்றார். இதற்காக ‛ரேபிடோ' காரை அவர் முன்பதிவு செய்தார். ‛ரேபிடோ' கார் வந்தது. ஷகீர் அகமது அந்த காரில் ஏறி பயணத்தை தொடங்கினார்.
அப்போது ரேபிடோ கார் டிரைவர் தொடர்ந்து ஸ்பீக்கர் போனில் பேசியுள்ளார். கார் பயணத்தின்போது போனில் பேசுவது தவறு என்றாலும் கூட தொழிலதிபர் அதனை கண்டுக்கொள்ளவில்லை. இதற்கு முக்கிய காரணம் அந்த டிரைவர் பேசிய விஷயங்கள் தான். இதுதொடர்பாக ஷாகீர் அகமது தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.
அந்த பதிவில், ‛‛கடந்த ஒரு மணிநேரமாக என் ரேபிடோ கார் டிரைவர் ஸ்பீக்கர் போனில் பேசினார். முதலில் அவருக்கு நண்பர் போன் செய்தார். அவர் காதலித்த பெண் இன்னொருவரை காதலிப்பதாக கூறி கண்கலங்கினார். வாழ பிடிக்கவில்லை. தற்கொலை செய்ய போகிறேன் என்று கூறினார். அவரை டிரைவர் தேற்றினார். அதன்பிறகு இன்னொரு நண்பருக்கு போன் செய்து உடனடியாக நண்பனை (தற்கொலை செய்வதாக கூறியவர்) தான் வரும்வரை பார்த்து கொள்ளும்படி கூறினார்.
அதன்பிறகு இன்னொரு நண்பரிடம் பேசினார். அப்போது ஊபர் நிறுவனத்தில் தனது ஐடி மற்றும் போட்டோவை பயன்படுத்தி ஒருவர் மோசடி செய்த கதையையும், அவரது ஐடி பிளாக் செய்யப்பட்டதையும் விவரித்தார். அதன்பிறகு இன்னொரு நண்பரிடம், சென்ட்ரல் பெங்களூரில் உள்ள போக்குவரத்து நெரிசல் பற்றி புகார் கூறி பேசினார். பிறகு இன்னொரு நண்பருக்கு போன் செய்து, தற்கொலை செய்வதாக கூறிய நண்பன் கதையை 5 நிமிடமாக கூறி ஆறுதல் சொல்லும்படி தெரிவித்தார்.
அதன்பிறகு அவரது தோழிக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை அடிபிறழாமல் கூறினார். என்னை பொறுத்தவரை இந்த நபரை போல் சமூக தொடர்பு கொண்ட சுவாரஸ்மான நபர் வேறு எவரும் இல்லை என்று நான் நினைக்கிறேன். நான் இப்போது பயணத்தை முடிக்க விரும்பவில்லை. இதனை எப்படி அவரிடம் சொல்வது?'' என பதிவிட்டார். இப்போது பலரும் யாரிடமும் மனம்விட்டு பேசுவது இல்லை. ஆனால் இந்த டிரைவர் இடைவிடாது அனைவரிடமும் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசியுள்ளதோடு, நண்பன் தற்கொலை செய்வதை தடுத்ததால் தொழிலதிபர் வியந்துள்ளார்.
தொழிலதிபர் ஷாகீர் அகமதுவின் இந்த பதிவு வைரலாக தொடங்கியது. 1 மில்லியன் வியூசை கடந்துள்ளது. இன்று மதியம் 3 மணி வரை 1874 பேர் ‛புக்மார்க்' செய்துள்ளனர். 19.7 K லைக்ஸ் அந்த பதிவுக்கு கிடைத்துள்ளது. பலரும் அந்த டிரைவரை பாராட்டி வருகின்றனர். அதேவேளையில் இன்னும் சிலரோ, ‛‛கார் ஓட்டும்போது போனில் பேசக்கூடாதே. எப்படி அனுமதித்தீர்கள்'' என கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் சிலர் வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர். ஒருவர், ‛‛இந்தியாவுக்கு தனியாக டிராமாவுக்கு கதை எதுவும் தேவையில்லை. தெருக்களிலேயே பல கதைகள் கிடைக்கின்றன'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications