புஷ்ஷான 3 மாஜி முதல்வர் ‛லாபி’..முதல்முறை எம்பி டூ மத்திய அமைச்சர்! யார் இந்த கர்நாடகாவின் சோமண்ணா?
பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சவையில் கர்நாடகாவை சேர்ந்த 4 லோக்சபா எம்பிக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் அனைவரின் புருவத்தையும் உயர்த்த செய்தவர் தான் முதல் முறை எம்பியான சோமண்ணா. யார் இவர்? பாஜகவின் ஓட்டு வங்கியான லிங்காயத் சமுதாயத்தின் 3 மாஜி முதல்வர்களின் லாபியை முறியடித்து அவர் எப்படி மத்திய அமைச்சர் பொறுப்பை பெற்றார்? என்பது பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. பாஜகவின் 240 எம்பிக்கள், கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் 52 எம்பிக்கள் என மொத்தம் 292 எம்பிக்களின் ஆதரவில் 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராகி உள்ளார்.

நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் பிரதமராக பொறுப்பேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். அதேபோல் மத்திய அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர். மொத்தம் 72 பேர் பதவியேற்றனர்.
இதில் கர்நாடகாவை சேர்ந்த 4 லோக்சபா எம்பிக்கள் மத்திய அமைச்சர்களாகினர். அதன்படி உப்பள்ளி - தார்வார் லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரகலாத் ஜோஷி மீண்டும் மத்திய அமைச்சரானார். அவருக்கு உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வழங்கப்பட்டுள்ளது. இவர் பிராமணர் பிரிவை சேர்ந்தவர்.
அதேபோல் மண்டியா தொகுதியில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் சார்பில் போட்டியிட்டு எம்பியான முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு கனரக தொழில் மற்றும் ஸ்டீல் துறை வழங்கப்பட்டுள்ளது. இவர் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர்.
அதேபோல் பெங்களூர் வடக்கு லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எடியூரப்பாவின் ஆதரவாளரான முன்னாள் மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலாஜே மீண்டும் அமைச்சராகி உள்ளார். ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்த இவருக்கு தொழிலாளர் நலத்துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவன துறையின் இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் துமகூரு லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்பியான பாஜக மூத்த தலைவர் சோமண்ணாவுக்கும் மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் ஜல் சக்தி மற்றம் ரயில்வே இலாகாவின் இணையமைச்சராக செயல்பட உள்ளார். இவர் பாஜகவின் ஓட்டு வங்கியான லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர். இந்நிலையில் தான் கர்நாடகாவின் பாஜகவின் முகமாக அறியப்படும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுடன் பகையுடன் இருக்கும் சோமண்ணாவுக்கு எப்படி மத்திய இணையமைச்சர் பதவி கிடைத்தது? என்பது தான் ‛டாக் ஆப்தி டவுன்' ஆக உள்ளது.
அதோடு கர்நாடகா லோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர்கரும், லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர்களுமான ஜெகதீஷ் ஷெட்டர் பெலகாவி தொகுதியில் வென்று எம்பியாகவும், அதேபோல் பசவராஜ் பொம்மை ஹாவேரியில் போட்டியிட்டு எம்பியாகி உள்ளனர். இவர்கள் 2 பேரும் எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் ஆவார்கள். இப்படி 3 முதல்வர்களை தாண்டி முதல் முறை எம்பியானதுமே சோமண்ணாவுக்கு மத்திய அமைச்சர் கிடைத்தன் பின்னணி பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
சோமண்ணா.. கர்நாடகாவின் பாஜகவின் மூத்த தலைவர். இவர் முதலில் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்தார். பெங்களூர் மாநகராட்சியின் கவுன்சிலராகி எம்எல்ஏவானார். பின்னிப்பேட்டை தொகுதி மற்றும் கோவிந்தராஜ் தொகுதிகளில் போட்டியிட்டு 5 முறை எம்எல்ஏவானார். காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சிகளில் அமைச்சராக பொறுப்பேற்றார். கடந்த பாஜக ஆட்சியில் முதல்வராக பசவராஜ் பொம்மை இருந்தபோது வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார்.
கடந்த ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலின்போது பெங்களூர் கோவிந்தராஜ் நகர் தொகுதியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக அவர் பொறுப்பு அமைச்சராக இருந்த சாம்ராஜ்நகர் தொகுதி மற்றும் முதல்வர் சித்தராமையா களமிறங்கிய வருணா என 2 தொகுதிகளில் களமிறங்கினார். இந்த 2 தொகுதியிலும் அவர் தோற்றார். இந்த தோல்விக்கு பிறகு அவர் எடியூரப்பாவை கடுமையாக விமர்சனம் செய்தார். தான் எம்எல்ஏவாக உள்ள கோவிந்தராஜ் நகர் தொகுதியில் தனக்கு சீட் வழங்காமல் வேறு 2 தொகுதிகளில் களமிறங்க வைத்து தோற்கடித்ததாக தெரிவித்தார். இதனால் எடியூரப்பா - சோமண்ணா இடையே புகைச்சல் ஏற்பட்டது.
இந்நிலையில் தான் துமகூரு லோக்சபா தொகுதியில் சோமண்ணா பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த தொகுதியில் கணிசமான அளவில் ஒக்கலிகர் ஓட்டு உள்ளது. இதனால் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் ஜேடிஎஸ் தலைவர் தேவகவுடா, அவரது மகன் குமாரசாமியின் ஆதரவை பெற்றார். அதேபோல் அங்குள்ள லிங்காயத் மடங்களுடன் அவருக்கு நல்ல உறவு உள்ளது. இதனால் லிங்காயத் மக்களின் ஓட்டுகளையும் அவர் பெற்றார். இதனால் ஒன்றரை லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் காங்கிரஸ் வேட்பாளராக முத்தே ஹனுமேகவுடாவை வீழ்த்தினார்.
அதன்பிறகு மத்திய அமைச்சர் பதவிக்கு ‛லாபி' தொடங்கியது. முன்னாள் முதல்வரான எடியூரப்பா தனது மகனும் சிவமொக்கா தொகுதியில் வென்ற ராகேவந்திராவுக்கு மத்திய அமைச்சர் பதவியை பெற காய்நகர்த்தினார். அதேபோல் எடியூரப்பாவின் ஆதரவாளர்களான முன்னாள் முதல்வர்கள் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் பசவராஜ் பொம்மை ஆகியோரும் பாஜக தலைவர்கள் மூலம் மத்திய அமைச்சர் பொறுப்புக்கு காய்நகர்த்தினர். சோமண்ணா, எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை என 4 பேரும் பாஜகவின் ஓட்டு வங்கியான லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர்.
இதனால் இவர்களில் யாருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது. கடைசியாக சோமண்ணாவுக்கு மத்திய இணையமைச்சர் பதவி என்பது கிடைத்துள்ளது. இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதாவது சோமண்ணா கர்நாடகாவில் உள்ள லிங்காயத் மடாதிபதிகளுடன் நெருக்கமான உறவை வைத்துள்ளார். இந்த மடாதிபதிகளுக்கும் பாஜக மேலிடத்துக்கும் நெருங்கிய உறவு உள்ளது. அந்த வகையில் மடங்களின் உதவியுடன் அசோமண்ணா மத்திய இணையமைச்சர் பதவியை பெற்றார்.
மேலும் லிங்காயத் சமுதாயத்தை பொறுத்தவரை எடியூரப்பா தான் முகமாக உள்ளார். அதேபோல் தற்போது அவரது இன்னொரு மகன் விஜயேந்திரா பாஜக மாநில தலைவராக உள்ளார். இது ஒரே குடும்பத்தை நம்பி இருக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தி உள்ளதாக பாஜக மேலிடம் நம்புகிறது. இதனால் எடியூரப்பா மற்றும் எடியூரப்பாவின் குடும்பத்துக்கு மாற்றாக இன்னொரு லிங்காயத் தலைவரை உருவாக்க பாஜக திட்டமிட்டுள்ளது.இதனால் சோமண்ணாவுக்கு மத்திய இணையமைச்சர் பதவியை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதேவேளையில் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் பசவராஜ் பொம்மை ஆகியோர் எடியூரப்பாவின் ஆதரவாளர்களாக உள்ளனர். ஏற்னகவே ஷோபாவுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் இவர்களில் ஒருவருக்கு வழங்கினால் அது மற்ற தலைவர்களை விரக்தியில் தள்ளும். அதோடு அவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கினால் அவர்கள் எடியூரப்பாவின் பேச்சை கேட்டு செயல்படுவார்கள். ஏனென்றால் இருவரும் எடியூரப்பாவின் ஆதரவாளர்கள். ஆனால் சோமண்ணா அப்படியில்லை.
சோமண்ணாவுக்கும், எடியூரப்பாவுக்கும் இடையே பிணக்கு உள்ளது. இதனால் எடியூரப்பாவை போல் நல்ல தலைவராக நிச்சயம் முயற்சிப்பார். மேலும் லிங்காயத் மடங்களுடன் நல்ல உறவு உள்ளதோடு கடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவில் தோற்ற பிறகு காங்கிரஸில் இணைய அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சோமண்ணா சேராமல் கட்சிக்காக உழைத்தார். இதனால் தான் பாஜக மேலிடம் லிங்காயத் கோட்டாவில் சோமண்ணாவின் பெயரை மத்திய இணையமைச்சர் பொறுப்புக்கு டிக் அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications