அவசரம்.. புயலாய் வந்து டோல்கேட்டில் மோதிய ஆம்புலன்ஸ்.. 4 பேர் பலி.. பதைபதைக்கும் வீடியோ
பெங்களூர்: கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து டோல்கேட்டில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில் நோயாளி உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து டோல்கேட் சிசிடிவியில் பதிவான நிலையில் விபத்து தொடர்பாக வீடியோ வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் சீரூரில் டோல்கேட் உள்ளது. இந்நிலையில் இன்று அங்கு மழை பெய்தது. இதனால் சாலை ஈரமாக இருந்தது.
இந்நிலையில் இன்று வேகமாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதையடுத்து சாலையில் இருந்த தடுப்புகளை ஊழியர்கள் அகற்றி கொண்டிருந்தனர்.

ஆம்புலன்ஸ் விபத்து
இந்த வேளையில் தடுப்புகள் மீது மோதாமல் இருக்கவும், டோல்கேட்டில் மெதுவாக செல்லவும் ஆம்புலன்ஸ் டிரைவர் வேகத்தை குறைக்க பிரேக் பிடித்தார். அப்போது ஆம்புலன்ஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கண் இமைக்கும் நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் பாய்ந்து வந்து டோல்கேட் மீது பயங்கரமாக மோதியது.

4 பேர் பலி
இதில் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி, 2 உதவியாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் டோல்கேட் ஊழியர் ஒருவரும் உடல் நசுங்கி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்தது. ஆம்புலன்ஸ் டிரைவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். இதுகுறித்து தகவல் அளிந்தவுடன் போலீசார் விரைந்து வந்து டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த 4 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து காரணம் என்ன?
முதற்கட்ட விசாரணையில் ஒன்னாவரில் இருந்து உடுப்பி மாவட்டம் குந்தாபுராவுக்கு நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்துக்கு உள்ளானது தெரியவந்துள்ளது. இருப்பினும் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதற்கான காரணம் தெரியவில்லை. ஆனாலும் ஆம்புலன்ஸில் பிரேக் செயலிழந்ததால் தான் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர்.

பதைபதைக்கும் வீடியோ
இதற்கிடையே ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது டோல்கேட்டில் உள்ள கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் வேகமாக வரும் ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து தரையோடு தரையாக வேகமாக வந்து டோல்கேட் சுவற்றிலும், ஊழியர் மீதும் மோதுவது நெஞ்சை பதைபதைக்கும் வகையில் உள்ளது.












Click it and Unblock the Notifications