பொட்டு வைக்க மாட்டியா? புருஷன் உயிரோடு தானே இருக்கிறார்?பெண்ணை திட்டிய கோலார் பாஜக எம்பி! சர்ச்சை
பெங்களூர் மாநகராட்சி கவுன்சிலராக இருந்த முனிஸ்வாமி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பெங்களூர்: மகளிர் தினத்தையொட்டி நேற்று கோலாரில் நடந்த கண்காட்சியை பாஜக எம்பி முனிஸ்வாமி தொடங்கி வைத்தார். அப்போது கடையில் இருந்த பெண்ணை பார்த்து, ‛‛முதலில் நெற்றியில் பொட்டு வையுங்கள். உங்களின் கணவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?, உங்களுக்கு பொதுவான அறிவு இல்லையா?'' என திட்டிய வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் நேற்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர் ஸ்டாலின் உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மேலும் மகளிர் தினத்தையொட்டி நேற்று ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர். பலரும் தங்களின் தாய், சகோதரி, மனைவி, காதலி, உறவுக்கார பெண்களுக்கும், தோழிகளுக்கும் மகளிர் தின வாழ்த்து கூறி பரிசுகள் வழங்கினர்.

மகளிர் தின கண்காட்சி
இந்நிலையில் மகளிர் தினத்தையொட்டி நேற்று கர்நாடகா மாநிலம் கோலாரில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சியை கோலார் எம்பியான பாஜகவை சேர்ந்த முனிஸ்வாமி தொடங்கி வைத்தார். அதன்பிறகு அவர் தனது ஆதரவாளர்களுடன் கண்காட்சியை பார்வையிட்டார். மேலும் அங்கிருந்த கடைகளை பார்த்தபடி நடந்து சென்றார்.

பொட்டு வைக்க கூறி திட்டிய எம்பி
இந்த வேளையில் ஒரு கடையில் பெண் இருந்தார். அவர் தனது நெற்றியில் பொட்டு வைக்கவில்லை. இதை பார்த்த முனிஸ்வாமி எம்பி கோபமடைந்தார். அவர் அந்த பெண்ணை பார்த்து, ‛‛முதலில் நெற்றியில் பொட்டு வையுங்கள். உங்களின் கணவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?. உங்களுக்கு பொது அறிவு கூட இல்லையா?'' என காட்டமாக கேட்டார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

கிளம்பிய எதிர்ப்பு
மேலும் முனிஸ்வாமி எம்பி கடைக்கார பெண்ணை பொட்டு வைக்கும்படி ஆக்ரோஷமாக பேசியது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் முனிஸ்வாமி எம்பியின் செயலுக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல்வேறு தரப்பினரும் அந்த பாஜக எம்பி முனிஸ்வாமியை விமர்சனம் செய்து வருகின்றனர்.

யார் இந்த முனிஸ்வாமி?
கோலார் நாடாளுமன்ற தொகுதி என்பது காங்கிரஸின் கோட்டையாக இருந்தது. கடந்த 1989 முதல் 2014 வரை நடந்த தேர்தலில்கள் காங்கிரஸ் கட்சி தான் இங்கு வெற்றி பெற்று வந்தது. காங்கிரஸ் கட்சியின் கேஎச் முனியப்பா 1991 முதல் 2019 வரை 7 முறை எம்பியாக இருந்தார். 2019 தேர்தலில் அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நிலையில் அவரை எதிர்த்து முனிஸ்வாமியை பாஜக நிறுத்தியது. இந்த தேர்தலில் முனிஸ்வாமி கேஎச் முனியப்பாவை, 2.1 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முனிஸ்வாமி வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் முனிஸ்வாமி களமிறங்கியபோது பெங்களூர் மாநகராட்சியின் காடுகோடி வார்டு கவுன்சிலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications