‛நோ ஏலம்’.. நான் தான் வாரிசு.. ஜெயலலிதாவின் பலகோடி சொத்தை கேட்கும் தீபா! கர்நாடகா கோர்ட்டில் மனு
பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்களை ஏலமிட கர்நாடகா அரசு வழக்கறிஞரை நியமித்துள்ளது. இந்நிலையில் தான் ஏலமிட வைக்கப்பட்டுள்ள பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை தன்னிடம் வழங்க வேண்டும் எனக்கூறி கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வராக ஜெயலலிதா இருந்தார். இவர் கடந்த 2016ம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். முன்னதாக ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிக்கினார். ஜெயலலிதாவுடன், அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
இவர்கள் 4 பேருக்கும் எதிராக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பெங்களூரில் உள்ள தனி நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம் தண்டனையை ரத்து செய்தது. இதையடுத்து உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததோடு, தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது.
இந்த தீர்ப்பின்போது ஜெயலலிதா மரணமடைந்திருந்தார். இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேர் மட்டும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் தண்டனை காலம் முடிந்து அபராத தொகையையும் செலுத்திவிட்டனர்.
இதற்கிடையே தான் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவிடம் இருந்து ஏராளமான பட்டுப்புடடைவகள், தங்க வைர நகைகள், காலணிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் பெங்களூரில் உள்ள அரசு கருவூலத்தில் உள்ளது. இந்த கருவூலத்தில் 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த சேலைகள், 750 ஜோடி காலணிகள், கைக்கெடிகாரங்கள், தங்க, வைர நகைகள் உள்பட ஏராளமான பொருட்கள் உள்ளன.

இந்த பொருட்களை ஏலமிட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் தான் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்களை ஏலம்விட கர்நாடக அரசு கிரண் எஸ் ஜாவலி என்பவரை வழக்கறிஞராக நியமனம் செய்துள்ளது. இதற்கிடையே தான் கர்நாடகா கருவூலத்தில் உள்ள பொருட்களை ஏலமிட ஜெ. தீபா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மாறாக ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜெ.தீபா சார்பில் கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை தீபா தரப்பு வழக்கறிஞர் சத்யகுமார் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ஜெ தீபா பல்வேறு விஷயங்களை குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது ஜெயலலிதாவின் வாரிசு நான் தான். இதனை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அவரது பல சொத்துகளை என்னிடம் வழங்கி உள்ளது. இதனால் கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்களையும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் மனுவோடு இணைக்கப்பட்டுள்ளன.
இந்த மனுவை ஏற்றுக்கொண்டுள்ள கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் வழக்கு விசாரணையை மே 26ம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியதால் தான் இந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது அவர் மரணமடைந்துள்ள நிலையில் ஜெ.தீபா அந்த பொருட்களுக்கு உரிமை கொண்டாடுகிறார். இது ஜெ.தீபாவுக்கு வழங்கப்படுமா? இல்லாவிட்டால் அரசு சார்பில் ஏலமிடப்படுமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications