கர்நாடக தாது சுரங்க மன்னன் ஜனார்த்தன ரெட்டி.. கட்சியை கலைத்து பாஜகவில் இணைந்தார்
பெங்களூர்: பாஜகவிலிருந்து பிரிந்து சென்று புதிய கட்சியை உருவாக்கிய, கர்நாடகாவின் முன்னாள் அமைச்சரும், சுரங்க தொழிலதிபருமான ஜனார்த்தன ரெட்டி தற்போது மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கர்நாடக மாநிலத்தை பொறுத்த அளவில், இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அதேபோல மே மாதம் 7ம் தேதி இரண்டாம் கட்டமாக 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இப்படி இருக்கையில், கர்நாடக அரசியலில் சில அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அதாவது, இனி பாஜகவில் இணையவே மாட்டேன் என்று கூறி அக்கட்சியிலிருந்து விலகி சென்று புதிய கட்சியை உருவாக்கிய ஜனார்த்தன ரெட்டி தற்போது மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டு கர்நாடகாவில் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வர துடித்துக்கொண்டிருந்தது. மொத்தம் 113 தொகுதிகளை கைப்பற்றினால் ஆட்சியை பிடித்துவிடலாம். ஆனால், பாஜகவுக்கு 3 தொகுதி குறைவாக இருந்தது.
அந்த நேரத்தில் சுயேட்சை எம்எல்ஏக்களை வளைத்து போட்டவர்தான் ஜனார்த்தன ரெட்டி. இதற்காக இவருக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டது. ஆனால், அமைச்சரான பின்னர் அவர் செய்த சம்பவம்தான் பாஜக முதலமைச்சர் எடியூரப்பா பதவி விலக நேர்ந்தது. அதாவது, கனிம வளங்கள் கொள்ளையில் இவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்கிற அளவுக்கு இவர் மீது புகார்கள் குவிந்தன. சிபிஐ விசாரணையை தொடங்கியது. உண்மை வெளிவந்ததையடுத்து அவரை கைது செய்தது.
அதன் பின்னர் அவர் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னரும் கூட, அவருக்கும் பாஜகவுக்கும் இடையேயான உறவு பழைய மாதிரி தொடரவில்லை. எனவே, அவர் புதியதாக 'கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா' எனும் கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் இவர் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இணையவில்லை.
இதனையடுத்து லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், தற்போது பாஜகவில் இணைந்திருக்கிறார். கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா, மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா ஆகியோர் முன்னிலையில் ஜனார்த்தன ரெட்டி பாஜகவில் இணைந்துள்ளார். அவர் மட்டுமல்லாது அவர் நடத்தி வந்த கட்சியையும் பாஜகவில் இணைத்துள்ளார்.
இது குறித்த பேசிய முன்னாள் முதல்வர் எடியூரப்பா, இந்த இணைவு பாஜகவுக்கு வலுசேர்க்கும் என்று கூறியுள்ளார். மேலும், “ஜனார்த்தன ரெட்டியும் அவரது மனைவியும் பாஜகவில் இணைந்துள்ளனர். அவர்கள் எடுத்த நல்ல முடிவு இது. அவர்கள் பாஜகவில் இணைந்துள்ளதால் கட்சி மேலும் வலுவடையும். 28 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும்” என்று கூறியுள்ளார்.
இந்த இணைப்பு குறித்து ஜனார்த்தன ரெட்டி கூறுகையில், “நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வர வேண்டும் என ஒட்டுமொத்த நாடும் விரும்புகிறது. எனவே, நானும் அதில் இணைந்துள்ளேன். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. நாட்டின் நலன் கருதி நான் பாஜகவில் இணைந்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவில் இணைந்தது. இதனையடுத்து தற்போது மற்றொரு கட்சியும் இணைந்திருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications
