காத்து வாங்கிய 'மைசூர் சலோ' யாத்திரை! கோட்டையிலேயே கோட்டை விட்ட ஜேடிஎஸ்! காங்கிரஸ் தான் காரணமாம்
பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், முதலமைச்சர் சித்தராமையா உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் மைசூர் நோக்கி யாத்திரையை மேற்கொண்டிருக்கின்றன. ஆனால், இதில் திட்டமிட்டபடி ஆட்களை திரட்ட முடியாமல் கட்சி நிர்வாகிகள் திணறி வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இந்நிலையில், எதிர்க்கட்சியாக உள்ள பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் (ஜேடிஎஸ்) ஆகியவை காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராகவும் தொடர் விமர்சனங்களை அடுக்கி வருகின்றன. குறிப்பாக மைசூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தில் ஊழல் நடந்திருப்பதாக (மூடா முறைகேடு) குற்றம்சாட்டியுள்ளன.

எனவே, சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று பாஜக மைசூர் நோக்கி 'மைசூர் சலோ' எனும் யாத்திரை போராட்டத்தை அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, மைசூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தால் முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பமும் நல்ல பலனை அனுபவித்திருக்கிறது. இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என சித்தராமையா குண்டை தூக்கி போட்டார். இதை கேட்ட குமாரசாமிக்கு தூக்கிவாரி போட்டது. அவசர அவசரமாக ஜேடிஎஸ் சார்பில் இந்த யாத்திரைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், யாத்திரையில் இரு கட்சி தலைவர்களும் தற்போது வரை பங்கேற்று வருகின்றனர். யாத்திரை நேற்று ராமநகருக்குள் நுழைந்தது. இது ஜேடிஎஸ்-ன் கோட்டை. ஆனால், போதிய ஆட்கள் பலம் இல்லாததால் பிசு பிசுத்தது. பாஜக சார்பில் ஷிவமொக்கா, உத்தர கன்னடா, கோலார் மற்றும் பெங்களூரு மாவட்டங்களில் இருந்து சுமார் 4,000 பேர் திரட்டப்பட்டிருந்தனர். ஆனால், ஜேடிஎஸ் இந்த அளவுக்கு கூட யாத்திரைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
இது குறித்து அக்கட்சியின் நிர்வாகிகள் கூறுகையில், "காங்கிரஸ் சார்பில் ஜனந்தோலனா மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அவர்கள் எங்கள் கட்சியின் ஆட்களை வளைத்து போட்டு வேலை செய்து வருகிறார்கள். எப்படி இருப்பினும், யாத்திரையின் இறுதி நாளான 10ம் தேதி எங்கள் முழு பலத்தையும் நாங்கள் காட்டுவோம்" என்று கூறியுள்ளனர்.
பாஜக, ஜேடிஎஸ்-ன் இந்த யாத்திரைக்கு எதிராக காங்கிரஸ் கையில் எடுத்துள்ள ஆயுதம்தான் 'ஜனந்தோலனா' மாநாடு. பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகளின் ஊழலை அம்பலப்படுத்துவது, காங்கிரஸ் கட்சியின் சாதனைகள் மற்றும் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது, இதன் மூலம் கட்சிக்கு வெகுஜன ஆதரவை திரட்டுவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
இப்படி இருக்கையில் மாநில அளவில் முக்கியத்துவம் பெற்ற யாத்திரைக்கு, ஜேடிஎஸ் போதிய ஆட்களை திரட்டாமல் இருப்பது பாஜக-ஜேடிஎஸ் கூட்டணிக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications