காவிரி விவகாரத்தில்.. மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்தை நடத்தும் கன்னட அமைப்புகள்.. பலத்த பாதுகாப்பு
பெங்களூர்: காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு-கர்நாடக இடையே சுமூகமான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை. இப்படி இருக்கையில் காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிடக்கூடாது என வலியுறுத்தி கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகா முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தை நடத்துகின்றன.
காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராடி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் விநாடிக்கு 25,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தியிருந்தது. இதனை கர்நாடகா ஏற்கவில்லை. எனவே உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது. அதேபோல கர்நாடக அரசும் நீதிமன்றத்தை நாட காவிரி மேலாண்மை ஆணையம் இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆணையமானது, விநாடிக்கு 5,000 கனஅடி நீரை திறக்க கர்நாடகாவுக்கு கூறியது. ஆனால் கர்நாடக இதை ஏற்கவில்லை. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாததாலும், ஒட்டுமொத்தமாக பருவமழை குறைந்ததாலும் நீர் வரத்து குறைவாக இருக்கிறது என்று கூறி இந்த நீரை திறக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றமானது, காவிரி மேலாண்மை ஆணையம் வழிகாட்டிய அளவுக்கு தண்ணீரை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இது கர்நாடகாவில் பெரும் சலசலப்புகளை உருவாக்கியுள்ளது. மண்டியா, சாம்ராஜ் நகர், மைசூர், பெங்களூர் உள்ளிட்ட என மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் பெங்களூரில் கடந்த 26ம் தேதி பந்த் நடத்தியிருந்தன. இதனையடுத்து இன்று வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட சலுவாளி கட்சி, கன்னட ரக்ஷன வேதிகே (பிரவீண்) ஆகிய அமைப்புகள், இதே விஷயத்திற்காக இன்று பந்த் போராட்டத்தை நடத்துகின்றன.
இந்த போராட்டத்திற்கு சுமார் 2,000 கன்னட அமைப்புகளும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் அதவளித்துள்ள நிலையில், பெங்களூரில் டவுன் ஹாலில் இருந்து சுதந்திர பூங்கா வரை பேரணி செல்ல போராட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் நேற்று நள்ளிரவு முதல் காவல்துறை பெங்களூர் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்திருக்கிறது. பந்த் போராட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும், போராட்டம் நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.
ஏற்கெனவே கடந்த 26ம் தேதி பெங்களூரில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு ஓலா, ஊபர் போன்ற வாடகை கார் நிறுவனங்கள் ஆதரவளித்திருந்தன. இதனையடுத்து இன்று நடைபெறும் மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்திற்கும் ஓலா, ஊபர் ஆதரவளித்துள்ளது. இது தவிர சில தொழிற்சங்கங்களும் ஆதரவளித்துள்ளன. மறுபுறம் பள்ளி கல்லூரிகள் விடுமுறையளிக்கப்பட்டிருக்கின்றன. ஐடி தொழில் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்க அறிவுறுத்தியுள்ளது. ஆனால் மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் ஆகியவை வழக்கம்போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications