எல்லா பாடத்திலும் ஃபெயில்.. 10ம் வகுப்பு மாணவனுக்கு கேக் வெட்டிய பெற்றோர்! சுவாரசிய பின்னணி
பெங்களூர்: கர்நாடகாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் ஃபெயில் ஆகி மொத்தமுள்ள 625 மதிப்பெண்ணுக்கு வெறும் 200 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற மகனுக்கு கேக் வெட்டி ஒரு குடும்பம் கொண்டாடி உள்ளது. இதன் பின்னணியில் சுவாரசிய தகவல் ஒன்று உள்ளது.
பொதுவாக 10ம் வகுப்பு, பிளஸ் 2, கல்லூரி, பல்கலைக்கழங்களில் நடக்கும் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தால் ஒவ்வொருவரின் வீடுகளிலும் கேக் வெட்டி கொண்டாடுவதை நாம் பார்த்து இருப்போம். அதேபோல் அரசு வேலை, ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் குடும்பத்தினரும் கேக் வெட்டி கொண்டாடுவதை நாம் ரசித்து இருப்போம்.

ஆனால் கர்நாடகாவில் 10ம் வகுப்பு தேர்வில் மகன் ஃபெயிலானதை ஒரு குடும்பமே கேக் வெட்டி கொண்டாடி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. எதற்காக அவர்கள் அப்படி செய்தனர்? இந்த சம்பவத்தின் பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
கர்நாடகாவில் உள்ள பாகல்கோட்டையை சேர்ந்தவர் அபிஷேக். இவர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதியிருந்தார். சமீபத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அபிஷேக் அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்தார். மொத்தம் 625 மார்க்கிற்கு நடந்த பொதுத்தேர்வில் அவர் வெறும் 200 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார்.
பலரது வீடுகளிலும் இப்படி ஒரு மதிப்பெண் எடுத்து அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்து இருந்தால் பெற்றோர் திட்டுவதோடு மட்டுமின்றி அடித்தே இருப்பார்கள். ஆனால் அபிஷேக்கின் பெற்றோர் அவரை அடிக்கவில்லை. திட்டவில்லை. மாறாக அபிஷேக்கை பாராட்டி உள்ளனர். அதுமட்டுமின்றி அவரது தாயும், தந்தையும் கேக் மற்றும் இனிப்புகள் ஆர்டர் செய்துள்ளனர். கேக்கில் 625க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளதை எழுதி வைத்து அதனை அபிஷேக்கை வெட்ட வைத்தனர்.
இந்த விழாவிற்கு குடும்பத்தினர் மட்டுமின்றி அக்கம்பக்கத்தினரையும் அழைத்துள்ளனர் அபிஷேக்கின் பெற்றோர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. பலருக்கும் இந்த சம்பவம் பெரும் ஆச்சரியமாக அமைந்துள்ளது. இதுபற்றி அபிஷேக் தந்தை கூறுகையில், ‛‛அபிஷேக் தேர்வு சமயத்தில் நன்றாக படித்தார். ஆனாலும் அவருக்கு தேர்வு முடிவுகள் சரியாக வரவில்லை. இதனால் அடுத்த முறை சிறப்பாக தேர்வெழுத அவரை ஊக்கப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். இதனால் அபிஷேக்கிற்கு கேக் வெட்டி கொண்டாடினோம்'' என்றார். இதுபற்றி அபிஷேக் கூறுகையில், ‛‛அடுத்த முறை அனைத்து பாடங்களிலும் நிச்சயம் தேர்ச்சி பெறுவேன்'' என்று உறுதியாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications