'மேகதாது அணைக்கு விரைவில் அனுமதி.. அதற்கு தேவையான அனைத்தையும் செய்வேன்..' கர்நாடக முதல்வர் அதிரடி
பெங்களூரு: மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அரசியல் செய்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மிக விரைவில் மேகதாதுவில் அணைக் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசு புதிதாக அணையைக் கட்ட முயல்கிறது. இந்த அணை மட்டும் கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் பலரும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தே வருகிறது. ஆனால், கர்நாடக அரசு அணை கட்டுவது உறுதி என்றே தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறது.

பசவராஜ் பொம்மை
இந்தச் சூழலில் கர்நாடக முதல்வராக புதிதாகக் பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை மைசூரு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கே பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் சாமி தரிசனமும் செய்தார், அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை, "மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை நாங்கள் மத்திய அரசுக்கு ஏற்கனவே சமர்பித்துவிட்டோம்.

அரசியல் செய்யும் தமிழ்நாடு
எங்கள் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்றே எதிர்பார்க்கிறோம். அதற்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். மிக விரைவில் மேகதாது அணை கட்டுமானத்தைத் தொடங்கவுள்ளோம். அனைத்தையும் கருத்தில் கொண்டு தான் இதைச் செய்கிறோம். தமிழ்நாடு அரசு தான் இதை வைத்து அரசியல் செய்கிறது. ஆனால் இது ஒன்றும் புதியது இல்லை. என்ன ஆனாலும், மேகதாதுவில் நாங்கள் அணை கட்டப்போவது உறுதி.

கட்டுமான பணிகள்
இது குறித்து தலைநகர் டெல்லி சென்று சம்பந்தப்பட்ட நபர்களைச் சந்திக்கவுள்ளேன். உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின் அடிப்படையிலேயே நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், பல லட்சம் கர்நாடக விவசாயிகள் பயன்பெறுவார்கள் இதில், நாங்கள் துளியும் அரசியல் செய்யவில்லை. மிக விரைவில் அணைக் கட்டும் பணிகள் தொடங்கப்படும்" என்று அவர் குறிப்பிட்டார்.

தேவையான நடவடிக்கை
மேலும், இது தொடர்பாக ஏற்கனவே மத்திய நீர்வளத் துறை அமைச்சரைச் சந்தித்துள்ளதாகவும், விரைவில் வழக்கறிஞர்கள் குழுவுடன் டெல்லி சென்று தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்பதைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய குழு கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications