’டேக் டைவர்ஷன்’.. ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிடும் சித்தராமையா-வெடிக்கும் போராட்டங்கள்!
பெங்களூர்: தமது முதல்வர் பதவிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் திசை திருப்பிவிடும் நடவடிக்கையாக கர்நாடகாவின் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை எதிர்ப்புகளுக்கு இடையே சட்டசபையில் தாக்கல் செய்யப் போவதாக சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு முறைகேடாக 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்ட விவகாரம்தான் அவரது பதவிக்கே ஆபத்தாக முன்நிற்கிறது.
கர்நாடகா முதல்வர் நாற்காலியில் சித்தராமையா அமர்ந்திருந்தாலும் நெருப்பு மீதுதான் உட்கார்ந்திருக்கிறார் என்பதுதான் யதார்த்தம். முதல்வர் பதவிக்கு குறிவைத்து அத்தனை வகைகளிலும் காய்களை நகர்த்தி வருகிறார் துணை முதல்வர் டிகே சிவகுமார். முதல்வர் சித்தராமையாவுக்கு ஒத்துழைப்பு தராதவர்களாக டிகே சிவகுமார் ஆதரவு அமைச்சர்களும் இருந்து வருகின்றனர். இதற்கு பதிலடியாக சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள் தங்களுக்கு துணை முதல்வர் பதவி தர கோருகின்றனர்.

பாஜக உக்கிரம்: காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இப்படி கலகம் வெடித்திருக்கும் நிலையில் எதிர்க்கட்சியான பாஜக சும்மா இருக்காது அல்லவா? காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கலகமூட்டுவது, சித்தராமையா அரசுக்கு எதிரான ஒவ்வொரு சிறு விஷயத்தையும் கையில் எடுத்து போராடுவது என்பதாக காலில் சலங்கையுடன் ஆடி வருகிறது.
மனைவிக்கு 14 மனைகள்: அதுவும் தற்போது மைசூர் வளர்ச்சி ஆணையமான மூடா நிறுவனம் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கிய விவகாரத்தை கையில் எடுத்து கடும் நெருக்கடி தருகிறது பாஜக. முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா பதவி விலக வலியுறுத்தி மைசூரில் நாளை பிரம்மாண்ட போராட்டத்தை நடத்துகிறது பாஜக. அதேநேரத்தில் மனைவிக்கு 14 மனைகள் ஒதுக்க நாங்கள் கேட்கவில்லை; எங்கள் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததற்கு நட்ட ஈடாகவே மனைகள் ஒதுக்கப்பட்டன எனவும் சித்தராமையா விளக்கம் தந்துள்ளார்.
அமலாக்கத்துறை ரெய்டு: மேலும் வால்மீகி வளர்ச்சி வாரிய முறைகேட்டில் அமலாக்கத்துறையும் களமிறங்கி இருக்கிறது. முன்னாள் அமைச்சர் நாகேந்திரா வீடு, காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. இதுவும் சித்தராமையா பதவிக்கு கடும் நெருக்கடிதான்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு: இந்த நிலையில் பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை அரசிடம்தான் உள்ளது. அதில் என்ன விவரங்கள் இருக்கின்றன என தெரியவில்லை. இந்த அறிக்கை விரைவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு சட்டசபையில் முன் வைக்கப்படும் என திடீரென அறிவித்துள்ளார்.
சித்தராமையா ஆட்டம் ஆரம்பம்: ஆனால் சித்தராமையாவின் இந்த அறிவிப்பே தமது பதவிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை திசைதிருப்புகிற செயல்தான் என்கின்றன கர்நாடகா அரசியல் வட்டாரங்கள். ஏனெனில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு சரியானதாக இல்லை; இந்த விவரங்களை வெளியிடவே கூடாது என கர்நாடகாவில் இரு பெரும் ஜாதிகளான ஒக்கலிகா கவுடாக்களும் லிங்காயத்துகளும் ஏற்கனவே எதிர்ப்பைக் காட்டி இருக்கின்றனர். துணை முதல்வர் டிகே சிவகுமார் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒக்கலிகா கவுடா, லிங்காயத் மடாதிபதிகளும் இந்த அறிக்கையை வெளியிடவே கூடாது என்கின்றனர். இந்த நிலையில் சித்தராமையா அரசு அறிக்கையை பகிரங்கப்படுத்தினால் கர்நாடகாவில் போராட்டங்கள் வெடிக்கத்தான் செய்யும். தமது பதவிக்கான எதிரான விவகாரங்கள் திசை மாறி பிரச்சனை வேறு ஒன்றாக மையம் கொள்ளும்; அதை சமாளிக்க முடியும் என்பதாலேயே இந்த அறிவிப்பை சித்தராமையா வெளியிட்டுள்ளார் என்கின்றன அம்மாநில மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications