கர்நாடகா காங். தலைவர் டிகே சிவகுமாருக்கு கொரோனா -பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி!
பெங்களூரு: கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.கே. சிவகுமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிவக்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் திங்கள்கிழமையன்று மட்டும் 60,975 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் மொத்தம் 31,67,323 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா 4-வது இடத்தில் இருக்கிறது.

கர்நாடகாவில் மொத்தம் 2,83,665 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4,810 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர். தற்போதைய நிலையில் மொத்தம் 81,211 பேர் கர்நாடகாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இம்மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா, எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர். இதனிடையே கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டிகே சிவகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அண்மையில் சிவகுமார் பார்வையிட்டார். இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் 5 அமைச்சர்கள் ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications