ஹேப்பி பர்த்டே.. இன்று பிறந்தநாளை கொண்டாடும் டி.கே.சிவக்குமார்.. பரிசாக முதல்வர் பதவி கிடைக்குமா?
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்நிலையில் மாநிலத்தின் முதலமைச்சர் யார் என்பது குறித்த விவாதங்கள் நீண்டு வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் இன்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். எனவே பிறந்தநாள் பரிசாக முதலமைச்சர் பதவி வழங்கப்படுமா எனும் எதிர் பார்ப்பு நீடித்து வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் வழக்கமாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர்தான் முதலமைச்சர் வேட்பாளராகவும் இருப்பார். அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டு முதல் கட்சியின் தலைவராக இருந்த டி.கே.சிவக்குமார்தான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மட்டுமல்லாது இவருக்கு ராகுல், சோனியாவிடமும் லாபி அதிகம். அவர்களும் இவரைத்தான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இவருக்கு போட்டியாக சித்தராமையாக உருவாகியிருக்கிறார். இவருக்கு ஏற்கெனவே 5 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த அனுபவம் இருக்கிறது. மட்டுமல்லாது இவர் இதுவரை 9 முறை தேர்தலில் ஜெயித்திருக்கிறார். ஆனால் சிவகுமார் 8 முறைதான் ஜெயித்திருக்கிறார். எனவே சீனியாரிட்டி அடிப்படையில் இவர் தரப்பு முதலமைச்சர் பதவியை கேட்டு வருகிறது. இது தவிர இவருக்கு லிங்காயத் மற்றும் இதர இந்து சமூகத்தினர் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது. மட்டுமல்லாது இத்துடன் தனது தேர்தல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட இருப்பதாகவும், எனவே கடைசியாக முதலமைச்சர் பதவி வேண்டும் என சித்தராமையா தரப்பு வலியுறுத்தியுள்ளது.
என்னதான் இப்படி சென்டிமென்டாக கேட்டாலும், டி.கே.சிவக்குமார் அளவுக்கு இவரது வேலை இருக்கவில்லை என்று உட்கட்சியினரே கூறுகின்றனர். மட்டுமல்லாது சிவகுமாருக்கு வொக்காலிகா சமூக மக்களின் அதீத செல்வாக்கு இருக்கிறது. 1989ம் ஆண்டு முதன் முதலாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் தற்பேது வரை காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறார். கட்சி பலவீனமாக இருந்த காலத்தில் இவர் ஆற்றிய பணி மீண்டும் காங்கிரஸ் பழைய நிலைமைக்கு திரும்ப ஓர் முக்கிய காரணமாக இருக்கிறது. ஆனால் பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் ஏற்கெனவே சிறைச்சென்று வந்திருக்கிறார்.
இவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதால், ஒருவேளை இவரை முதலைமைச்சராக நியமித்துவிட்டால் மத்திய அரசு இந்த வழக்கை மீண்டும் தூசி தட்ட தொடங்கிவிடும். இப்படியாக இவர் சிறைக்கு சென்றுவிட்டால் என்ன செய்வது? என்று கட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறது. இப்படி இருக்கையில்தான் இன்று டி.கே.சிவகுமார் இன்று தனது 61வது பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகிறார். நேற்று இரவு நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏகள் கூட்டத்தில் சிவகுமாருக்கு கேக் வெட்டப்பட்டது.
சித்தராமையாக சிவகுமாருக்கு கேக் ஊட்டி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிறந்தநாள் பரிசாக சிவகுமாருக்கு காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த கூட்டம் நடந்துக்கொண்டிருக்கையில் சிவகுமார் மற்றும் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் கூட்டம் நடக்கும் வளாகத்திற்கு வெளியே இருவர்களின் பெயர்களையும் மாறி மாறி முழக்கமிட்டனர். இன்று சிவகுமாரின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications