40 சீட் தான்.. கர்நாடகாவில் தாமரை மலரவே மலராது..காரணம் இதுதான் என கிண்டலடித்த ராகுல்.. பறந்த விசில்
பெங்களூர்: கர்நாடகாவில் நேற்று ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்து காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரித்தார். மேலும் பொதுக்கூட்டங்களில் அவர் பேசினார். இந்த வேளையில் பாஜக 40 இடங்களில் மட்டும் தான் ஜெயிக்கும் என ராகுல் காந்தி கூறியதோடு, பாஜகவை திடீரென கிண்டலடித்த சம்பவம் நடந்தது. இதை கேட்ட தொண்டர்கள் விசிலடித்து ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்தனர்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் மே 13ல் எண்ணப்பட உள்ளன. தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன. இதனால் அங்கு தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது.

கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் நடைபெற உள்ள தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்தை தக்கவைக்க அக்கட்சி வியூகம் வகுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல மேலிட தலைவர்கள் கர்நாடகாவில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளையில் காங்கிரஸ் கட்சியும் விடவில்லை. பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட மூத்த மேலிட தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் சொந்த மாநிலம் கர்நாடகா என்பதால் அவரும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் தான் நேற்று ராகுல் காந்தி மல்லிகார்ஜூன கார்கேவின் சொந்த மாவட்டமான கலபுரகியில் பிரசாரம் செய்தார். மேலும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ராகுல் காந்தி மக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
‛‛இந்த நாட்டில் கர்நாடகா பாஜக அரசு என்பது 40 சதவீத அரசாக இருக்கிறது. இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி எதுவும் பேசவில்லை. விரைவில் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அமையும். கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும். 150க்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப் போவது காங்கிரஸ் தான். இதை யாராலும் தடுக்க முடியாது'' என்றார்.
மேலும் இந்த பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பாஜகவை கிண்டல் செய்தார். இதுபற்றி ராகுல் காந்தி, ‛‛கர்நாடகாவில் பாஜவுக்கு 40 சீட் மட்டும் தான் கிடைக்கும். அதற்கு மேல் கர்நாடகா மக்கள் பாஜகவுக்கு அதிக இடங்களை கொடுக்க மாட்டார்கள். மேலும் பாஜகவுக்கு பிடித்த நம்பராக 40 உள்ளது. இதனால் பாஜக அரசு செய்யும் அனைத்து பணிகளிலும் 40 சதவீத கமிஷனை பெற்றனர்'' என நக்கலாக கூறினார். இந்த வேளையில் மேடைக்கு முன்பு இருந்த ஆதரவாளர்கள் விசிலடித்து ராகுல் காந்தியை உற்சாகப்படுத்தினர்.
அதாவது கர்நாடகா பாஜக அரசு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 40 சதவீத கமிஷன் தொகை பெறுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் தான் 40 என்பது பாஜகவுக்கு பிடித்த நம்பராக உள்ளதாக ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications