சின்ன சந்தேகம் தான்.. இவிஎம்-விவிபேட் இயந்திரங்களை உடைத்தெறிந்த மக்கள்.. கர்நாடகா தேர்தலில் பதற்றம்
பெங்களூர்: கர்நாடகாவில் சட்டசபை தேர்தலில் முறைகேடு நடக்கிறதா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு இயந்திரம், விவிபேட்டை சாலையில் தூக்கி வீசி உடைத்ததோடு, தேர்தல் அலுவலர்களை தாக்கி, காரை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Recommended Video
கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது. காலை 7 மணி முதல் மக்கள் வாக்களித்து வருகின்றனர். அதேபோல் விஜயாப்புரா மாவட்டம் பசவனபாகேவாடி தாலுகா மசபினாலா கிராமத்தில் உள்ள பூத்திலும் காலை முதல் அமைதியான முறையில் வாக்காளர்கள் வாக்களித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று மதியம் திடீரென்று தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் மசபினாலா கிராமத்தில் உள்ள பூத்தில் இருக்கும் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரங்களை தூக்கி சென்றனர். இதை அங்கு ஓட்டுப்போட வரிசையில் காத்திருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவுக்கு நேரம் இருக்கும் நிலையில் ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரங்களை எங்கே எடுத்து செல்கிறீர்கள்? என கேட்டனர். அதற்கு அவர்கள் சரியாக பதில் சொல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் தேர்தலில் முறைகேடு நடத்த முயற்சி நடப்பதாக வாக்காளர்கள் நினைத்தனர். இதனால் துருவி துருவி கேள்வி கேட்டனர். ஆனால் அலுவலர்கள் சரியான வகையில் பதிலளிக்கவில்லை.
இதனால் கோபமடைந்த வாக்காளர்கள் காரில் ஏற்றப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரங்களை தூக்கி ரோட்டில் வீசி உடைத்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். மேலும் காரின் கண்ணாடியை உடைத்தவர்கள் நம்பர் பிளேட்டையும் சேதம் செய்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து கூடுதல் போலீசார் விரைந்து வந்தனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் வாக்காளர்களிடம் விளக்கம் அளித்தனர். அதாவது ஓட்டுப்பதிவு நடக்கும் ஓட்டுப்பதிவு இயந்திரத்தை நாங்கள் எடுத்து செல்லவில்லை. இது கூடுதலாக வைக்கப்பட்டு இருந்த இயந்திரங்கள் தான். ஏதேனும் இயந்திரங்கள் பழுதானால் அதற்கு மாற்றாக பயன்படுத்த தயார் நிலையில் இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த நிலையில் அதனை தான் அலுவலர்கள் தூக்கி சென்றதாக தெரிவித்தனர். இதையடுத்து வாக்காளர்கள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக தேர்தல் அலுவலர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரங்களை காரில் இருந்து எடுத்து தரையில் போட்டு உடைக்கும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications