"சார் எனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைங்க.." மனுவுடன் வந்த இளைஞர்.. ஸ்டன் ஆன மாவட்ட ஆட்சியர்!
பெங்களூர்: கர்நாடகாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் வினோதமான கோரிக்கை உடன் புகார் அளித்துள்ளார். அதாவது அவருக்கு 10 ஆண்டுகளாகத் திருமணத்திற்குப் பெண் தேடி வருகிறார்களாம். ஆனாலும் இவருக்குத் திருமணம் நடந்த பாடு இல்லை. விவசாயம் செய்வதாலேயே தன்னை திருமணம் செய்ய யாரும் தயாராக இல்லை என்றும் தனக்கு மணமகள் தேடித் தருமாறு கர்நாடக அரசிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
நமது நாட்டில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும். அதில் பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்களும் தங்கள் புகார்களை அளிப்பார்கள்.

இதற்கிடையே கர்நாடகாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வினோதமான புகாரை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவை வாங்கி பார்த்த மாவட்ட ஆட்சியருக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.
விவசாயி மனு: கர்நாடக மாநிலம் கொப்பகல் மாவட்டத்தில் உள்ள கனககிரி என்ற பகுதியில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு நேற்று புதன்கிழமை ஜன ஸ்பந்தனா எனப்படும் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சங்கப்பா ஷிரஹட்டி என்ற 30 வயது விவசாயி, கொப்பல் மாவட்ட ஆட்சியர் நளீன் அத்துலிடம் மனுவை அளித்தார். 10 ஆண்டுகளாகப் பிரச்சினை இருப்பதாகவும் அதைத் தீர்க்க வேண்டும் எனச் சொல்லி அந்த நபர் மனு அளித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரும் ரொம்பவே சீரியஸாக அந்த மனுவை வாங்கி பார்த்து இருக்கிறார். அதைப் படித்த பிறகே அந்த நபர் மணப்பெண் வேண்டி மனு கொடுத்து இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. இதைப் பார்த்ததும் மாவட்ட ஆட்சியருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒரு நொடி அவரே ஸ்டன் ஆகிவிட்டார். அதன் பிறகு அருகில் இருந்தவர்களிடம் ஆலோசித்த அவர், சிரித்துக் கொண்டே அந்த மனுவைப் பெற்றுக் கொண்டார்.
என்ன சொன்னார்: கலெக்டரிடம் மனு அளித்த சங்கப்பா அதன் பிறகு பேசுகையில், "இந்த பகுதியில் வசூலிக்கும் மக்களின் பிரச்சினைகளைக் கேட்டு அதற்குத் தீர்வுகளைக் கொடுத்து வருகிறீர்கள்.. என்னைப் போன்றவர்களின் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளுக்கும் முன்னுரிமை கொடுத்துத் தீர்வு காண வேண்டும். திருமண வயதில் இருக்கும் இளம் விவசாயிகளுக்குப் பெண் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கிறது. அதற்கு நீங்கள் உதவ வேண்டும்.
இப்போது யாரும் தங்கள் வீட்டு பெண்களை விவசாயிகளுக்குத் திருமணம் செய்து வைக்க முன்வருவதில்லை.. இதனால் பல இளைஞர்கள் திருமணம் செய்வதற்காகவே விவசாய தொழிலை விட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனது குடும்பத்திற்குச் சொந்தமாக ஆறு ஏக்கர் நிலம் இருக்கிறது. நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம்.
விரும்புவதில்லை: கடந்த 10 ஆண்டுகளாக எனக்குப் பெண் தேடி வருகிறார்கள். இதற்காக நிறைய நேரத்தையும் பணத்தையும் செலவழித்துள்ளோம்.. ஆனால் எந்த குடும்பமும் தங்கள் மகளுக்கு விவசாயியைத் திருமணம் செய்து வைக்க விரும்புவதில்லை. இதனால் விரக்தியடைந்து ஒரு கட்டத்தில் மனநலப் பிரச்சினை கூட ஏற்பட்டது.. அதேநேரம் எனக்கு மட்டும் இந்த பிரச்சினை இல்லை. எங்கள் ஊரில் இருக்கும் பல நூறு இளம் விவசாயிகளுக்கும் இதே பிரச்சினை தான். எனவே, அரசு எங்களைப் போன்றவர்களுக்கு உதவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
ஸ்டன் ஆன ஆட்சியர்: 10 ஆண்டுகளாகப் பெண் தேடியும் கிடைக்காததால் அதிருப்தியின் உச்சத்திற்கே சென்ற இவர், இப்போது மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாகப் புகார் மனு அளித்துள்ளார். அந்த விவசாயி இப்படிப் பேசியதைக் கேட்டு கலெக்டரால் மட்டுமின்றி மேடையில் இருந்த அனைவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. பிறகு இந்த மனுவை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், சரியான மணப்பெண்ணைக் கண்டுபிடிக்க உதவுமாறு கிராமத் தலைவரிடம் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications