பெங்களூர் டிராபிக்கிற்கு ‛குட்பை'.. சென்னையை போல் கர்நாடகா அரசு புதிய திட்டம்.. One city One Card-ன் பின்னணி
பெங்களூர்: பெங்களூரில் போக்குவரத்தை குறைக்கவும், சாலை வசதியை மேம்படுத்த வசதியாகவும், பொதுப்போக்குவரத்தை அதிகமான மக்கள் பயன்படுத்த வைக்கவும் புதிய திட்டம் கையில் எடுக்கப்பட உள்ளது. இதற்காக 90 நாள் செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதோடு, சென்னையை போல் ‛One City - One Card' என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதுபற்றிய விவரங்கள் வருமாறு:
பெங்களூர் நகரில் திரும்பும் திசையெங்கும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டு வருகிறது. மேலும் சாலைகளில் ஆங்காங்கே குண்டும், குழிகளும் உள்ளன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இந்த பிரச்சனைகளை சரிசெய்ய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் தான் போக்குவரத்து நெரிசலை குறைப்பது மற்றும் சாலைகளின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக கர்நாடகா தலைமை செயலாளர் ஷாலினி ரஜ்னீஷ் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மூத்த அதிகாரிகள், நகர திட்டமிடல் தொடர்பான வல்லுநர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் (நகர மேம்பாட்டு துறை) துஷார் கிரிநாத், ஜிபிஏ கமிஷனர் மகேஷ்வர் ராவ், பயோகான் நிறுவனர் கிரண் மஜூம்தார், சமூக ஆர்வலர் ஆர்கே மிஸ்ரா உள்பட பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
One City - One Mobility Card
இந்த கூட்டத்தில் 90 நாள் செயல் திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. குறிப்பாக பொதுபோக்குவரத்தை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டது. One City - One Mobility Card என்ற பெயரில் பயண அட்டை மற்றும் டிஜிட்டல் செயலி உருவாக்கப்படும். இதன் மூலம் பிஎம்டிசி பஸ், மெட்ரோ ரயில், ஆட்டோ சேவைகளை ஒருங்கிணைத்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி தலைமை செயலாளர் ஷாலனி ரஜ்னீஷ் கூறுகயைில், "2026 மார்ச்சுக்குள் நகரின் போக்குவரத்து நெரிசல், சாலை வசதிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்களைக் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், 'One City - One mobility card' என்ற திட்டத்தை வகுத்துள்ளோம்.
சென்னை போல் அமலாகும் திட்டம்
இதற்காக பெங்களூர் வளர்ச்சி ஆணையம், நகர வளர்ச்சி துறை, பெங்களூர் மெட்ரோ ரயில் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் நகரின் ஒவ்வொரு பகுதிகளையும் பொதுபோக்குவரத்துடன் இணைக்கும் வகையில் செயல்பட உள்ளனர்.
இந்த அமைப்பு பிஎம்டிசி, பிஎம்ஆர்சிஎல் மட்டுமின்றி 'நம் யாத்ரி' போன்ற செயலிகள் மூலம் ஆட்டோ சேவைகளையும் ஒருங்கிணைத்து வழங்க உள்ளது’’ என்றார். இதன்மூலம் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய தேவை இருக்காது. இதனால் அவர்கள் சொந்த வாகனத்தை பயன்படுத்தாமல் பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது போக்குவரத்து குறையும்.
இந்த திட்டம் தற்போது சென்னையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 22ம் தேதி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ‛சென்னை ஒன்' என்ற செயலியை அறிமுகம் செய்தார். இதன்மூலம் பேருந்துகள், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்கள் மற்றும் ஆட்டோக்களின் சேவைகள் ஒருங்கிணைத்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த பாணியில் பெங்களூரில் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
பஸ் சேவைகள் அதிகரிப்பு
மேலும் பெங்களூர் நகரில் 75 முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து சேவை மேம்படுத்தப்பட உள்ளது. போக்குவரத்து சேவை குறைவாக உள்ள பகுதிகளில் சிறிய பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ்கள் தொழில்நுட்ப பூங்காக்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும். அதேபோல் வர்த்தூர் மேம்பாலத்தில் இரு அடுக்குச் சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிவட்ட சாலை மேம்பாட்டு தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய திட்டங்களை நகர்ப்புற வளர்ச்சித் துறை அக்டோபர் 15-க்குள் இந்த திட்டத்தை மாநில அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கும், அதன்பின்னர் டெண்டர்கள் வெளியிடப்படும்.
கட்டண வாகன நிறுத்தம்
பெங்களூரில் தற்போது 1.2 கோடி வாகனங்கள் உள்ளன. இதில் அதிகமாக இருசக்கர வாகனங்கள் உள்ளன. மொத்த வாகனங்களில் 82 சதவீதம் இருசக்கர வாகனங்கள் தான். இதனால் வாகன நிறுத்தம் பெரிய பிரச்சனையாக உள்ளது. எனவே 1,194 கி.மீ. நகர சாலைகள் வாகன நிறுத்தமில்லாத பகுதிகளாக அறிவிக்கப்படும். மாற்று வாகன நிறுத்தப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, வருவாய் ஈட்டும் வகையில் டெண்டர்கள் மூலம் பராமரிக்கப்படும்.
சட்டத்துக்கு புறம்பாக நிறுத்தப்படும் வாகனங்கள் டோவிங் வாகனம் மூலம் இழுத்து செல்லப்படும். அதேபோல் மக்களுக்கு மாதாந்திர வாகன நிறுத்த பாஸ்கள் அறிமுகம் செய்யப்படும். பல்வேறு இடங்களில் சாலைகளின் குறுக்காக 78 ஆகாய நடைபாதைகள் அமைக்கப்படும். இது தனியார் - அரசு பங்களிப்பில் மேற்கொள்ளப்படும். எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் கே.ஆர். புரம் போன்ற பகுதிகளில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படும்.
நெரிசல் கட்டண முறை
இதுதவிர carpooling மற்றும் அவுட்டர் ரிங்ரோட்டில் பாஸ்ட்டேக் அடிப்படையில் நெரிசல் கட்டண முறையை கொண்டு வரப்படுவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. சாலை பணிகள், சாலை புனரமைப்பு பணிகள் இணையதளம் வாயிலாக கண்காணிக்கப்படும். பணியை சரியாக செய்யாத ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை செயலாளர் வார்னிங் செய்துள்ளார்.
90 நாள் செயல்திட்டம்
மேலும் ‛ப்ரீ போக்குவரத்து 2026' என்று 90 நாள் செயல் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. கீழ் முதல் மாதத்தில் 1,600 கிலோமீட்டர் நகர சாலைகள் மேம்படுத்தப்படும். 2வது மாதத்தில் ‛என் சாலை என் பொறுப்பு' என்ற பெயரில் மக்கள் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படும். பிறகு நகரின் தூய்மையை பராமரிக்க தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். இது 90 நாள் செயல்திட்டமாகும்.












Click it and Unblock the Notifications