பெங்களூர் மாநகராட்சியை 5 ஆக பிரிக்க கர்நாடக அரசு முடிவு.. வெளியான முக்கிய அறிவிப்பு
பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சிக்கு 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு தேர்தல் நடத்தப்படமால் இருக்கும் நிலையில், தற்போது பெங்களூர் மாநகராட்சியை கிழக்கு, மேற்கு, மத்தி, வடக்கு, தெற்கு என 5 ஆக பிரித்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இது தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்க ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பெங்களூர் மாநகராட்சியின் நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய வரைவு அறிவிப்பு ஒன்றை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. நகர நிர்வாகத்தை பரவலாக்குவது மற்றும் மக்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்கும் நோக்கில் பெங்களூர் மாநகராட்சியை மேற்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு, மத்தி என 5 ஆக பிரித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான மக்கள் ஆட்சேபனை தெரிவிக்க 30 நாட்கள் கால அவகாசமும் வழங்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதில் மத்திய பெங்களூர் மாநகராட்சியில் மட்டும் சிவாஜி நகர், சாந்தி நகர், சிக்க்பெட், காந்திநகர் மற்றும் சாமா ராஜ்பேட் போன்ற பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உள்ளூர் நிர்வாகத்தை மேம்படுத்துதல், அடிமட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குதல் மற்றும் குடிமக்கள் சேவைகளை ஒழுங்குபடுத்துதல் ஆகியவை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
5 மாநகராட்சியாக பிரிப்பு
எனவே இனி பெங்களூர் மாநகராட்சியானது, பெங்களூர் மேற்கு மாநகராட்சி, பெங்களூர் கிழக்கு மாநகராட்சி, பெங்களூர் வடக்கு மாநகராட்சி, பெங்களூர் தெற்கு மாநகராட்சி, பெங்களூர் மத்திய மாநகராட்சி என்று 5 மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டு, அந்த மாநகராட்சிகளுக்கான பெயர், எல்லைகளும் வரையறுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெங்களூருடன் புறநகரில் உள்ள ஆனேக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது பெங்களூர் புறநகர், ராமநகர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களும் பெருநகர பெங்களூர் மாநகராட்சி எல்லைக்குள் சேர்க்கப்பட்டு உள்ளது.
எல்லைகளும் வரையறுப்பு
இது தொடர்பாக ஆட்சேபனை மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க பொதுமக்களுக்கு அரசு கால அவகாசம் வழங்கி உள்ளது. அதன்படி அடுத்த மாதம் 20 ஆம் தேதி வரை ஆட்சேபனை தெரிவிப்பவர்கள் தெரிவிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் அடுத்த 30 நாட்களுக்குள் பெங்களூர் விதான சவுதா 4-வது மாடியில் உள்ள நகர வளர்ச்சி துறை கூடுதல் கமிஷனரை சந்தித்து பொதுமக்கள் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கிரேட்டர் பெங்களூர் நிர்வாக சட்டம் 2024 ஏப்ரல் 24 அன்று அறிவிக்கப்பட்டது. இந்த சட்டம் BBMP சட்டத்தை ரத்து செய்து, புதிய கிரேட்டர் பெங்களூர் நிர்வாக ஆணையம் மற்றும் 7 மாநகராட்சிகளை உருவாக்க வழிகாட்டுகிறது. இதன் மூலம் நகரின் நிர்வாக அமைப்பு நவீனமயமாக்கப்படும்.
நகர வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும்
மாநகரத்தின் வெளிப்புற பகுதிகளில் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ராஜராஜேஸ்வரி நகர், யஷ்வந்த்பூர், மகாதேவபுரா மற்றும் கே.ஆர்.புரம் போன்ற பெரிய தொகுதிகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநகராட்சிகளாக மாற்றப்பட்டுள்ளன. இது நிர்வாகத்தை எளிதாக்குவதோடு குடிமக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும்.
இந்த மாற்றங்கள் ஆளுநரின் ஒப்புதலுக்கு உட்பட்டதாகும். மேலும், புதிய அமைப்பின் கீழ் மாநகராட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள். இது நகரின் ஜனநாயக செயல்முறையை வலுப்படுத்தும். பெங்களூரின் நிர்வாக மாற்றங்கள் நகர வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் எனவும், புதிய மாநகராட்சிகளின் உருவாக்கம் உள்ளூர் நிர்வாகத்தை வலுப்படுத்துவதோடு, மக்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்க முடியும் எனவும், பெங்களூருவின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications