தாம்பத்திய உறவுக்கு மறுத்த கணவன்.. கிரிமினல் வழக்கு போட்ட மனைவி.. ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு
பெங்களூர்: தாம்பத்திய உறவுக்கு மறுத்ததாக தனது மனைவி விவாகரத்து கேட்டதுடன், தன் கணவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்த கர்நாடகா உயர்நீதிமன்றம், வாழ்க்கையில் கணவன் தாம்பத்தியத்தை மறுப்பது கொடுமை ஆகாது என்று கூறியுள்ளது.
தன்னுடைய கணவர் ஆன்மிக வீடியோக்களைப் பார்ப்பதால், திருமணத்திற்குப் பிறகு உடல் உறவில் ஈடுபடவில்லை என்றும், அது மிகவும் கொடுமையானது என்றும் கூறி, தன் கணவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 498-ஏ பிரிவின் கீழ் மனைவி தாக்கல் செய்த புகாரை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

கர்நாடகாவில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி ஜோடி ஒன்றுக்கு திருமணம் நடந்தது. புது மாப்பிள்ளையான மணமகன், தனது மனைவியுடன் அவரது தாயார் வீட்டிற்கு சென்றார். அங்கு கிட்டத்தட்ட 28 நாட்கள் தம்பதிகள் தங்கி உள்ளனர். ஆனால் அவர்களுக்குள் தாம்பத்திய உறவு நடக்கவில்லையாம்.
இதனால் பொறுமை இழந்த மனைவி கணவருக்கு எதிராக கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி குடும்பநல நீதிமன்றத்தில் இந்து திருமணச் சட்டப் பிரிவு 12(1)(ஏ)ன் கீழ் வழக்கு போட்டார். அத்துடன் அதில், 'எனது கணவர் என்னுடன் தாம்பத்திய உறவு கொள்ளவில்லை. அவர் ஆன்மீக வீடியோக்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
எப்போது பார்த்தாலும் பிரம்மகுமாரி சமாஜத்தின் ஆன்மீக வீடியோக்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் எப்போது போய் தாம்பத்தியம் வைத்துக்கொள்ளலாம் என்று கேட்டாலும், தாம்பத்தியம் வேண்டாம் என்று கூறுகிறார். அவருடன் சேர்ந்து வாழ்வது எனக்கு கொடுமையாக உள்ளது. எனவே எங்களது திருமணத்தை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.
இவ்வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், கடந்தாண்டு நவம்பர் 16ம் தேதி, தம்பதிகளின் திருமணத்தை ரத்து செய்தது. விவாகரத்து வாங்கிய கையோடு, தன் கணவர் திருமணத்திற்கு பிறகு தாம்பத்தியத்தை மறுத்து கொடுமை செய்ததற்காக அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்ற தனி நீதிபதி எம்.நாகபிரசன்னா, 'மனுதாரர் (கணவர்) மீதான ஒரே குற்றச்சாட்டு, அவர் ஆன்மீகத்தை பின்பற்றுபவர் என்பதுதான். காதல் என்பது தாம்பத்திய உறவால் மட்டும் வருவதில்லை. ஆன்மாவுடன் ஆன்மாவை இணைப்பது என்று அவர் நம்புகிறார். அவர் தனது மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 12(1)(இ) இன் கீழ், தாம்பத்திய உறவு கொள்ளாமல் இருப்பது கொடுமைக்கு சமம் என்று கூறப்பட்டாலும், ஐபிசி 498ஏ பிரிவின் கீழ், கணவர் தாம்பத்திய உறவு கொள்ளாமல் இருப்பதை கொடுமையாக கருத முடியாது. விவாகரத்து தேவை என்பதற்காக, எதிர்மனுதாரர் தாம்பத்திய உறவு பிரச்னையை எழுப்பி உள்ளார். இவ்வழக்கில் மனைவி கேட்டப்படி கணவன் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க முடியாது. எனவே கிரிமினல் வழக்கு பதிய கோரிய இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது' என நீதிபதி தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications