ஆண் ஐஏஎஸ்களுக்கு போட்டோ ஷேர் செய்தாராம் ரோகினி! ஐபிஎஸ் அதிகாரி ரூபா கிளப்பிய பகீர் புகார்!
கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி தனது தனிப்பட்ட படங்களை 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஐபிஎஸ் அதிகாரி டி ரூபா பரபரப்பான குற்றச்சாட்டை கூறிய நிலையில் இருவருக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா இருந்தபோது அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஐபிஎஸ் அதிகாரி டி ரூபா பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார். இதில் பிரபலமான ஐபிஎஸ் அதிகாரி டி ரூபாவுக்கும், ஐஏஎஸ் அதிகாரியான ரோகினி சிந்தூரிக்கும் இடையே குடுமிப்பிடி சண்டை நடந்து வருவது தற்போது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி தனது தனிப்பட்ட படங்களை 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருப்பதாக அந்த படங்களை வெளியிட்டு டி ரூபா பரபரப்பான புகார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருப்பவர் டி ரூபா. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த வேளையில் சிறைத்துறை டிஐஜியாக டி ரூபா இருந்தார்.
அப்போது சிறையில் சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.2 கோடி வரை அப்போதைய சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த சம்பவம் கர்நாடகா, தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஐஏஎஸ் ரோகினி-ஐபிஎஸ் ரூபா
இந்நிலையில் தான் தற்போது ஐபிஎஸ் அதிகாரி ரூபா தற்போது கர்நாடகா கைவினை பொருட்கள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார். இதேபோல் கர்நாடகாவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி. இவர் தற்போது கர்நாடகா மாநில இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் தற்போது ஐபிஎஸ் அதிகாரி டி ரூபா, ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி இடையே பெரிய சண்டை நடந்து வருகிறது. இது பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வரை வந்துள்ளதால் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் நெட்டிசன்கள் வரை இது பேசும் பொருளாகி உள்ளது.

துவங்கிய பிரச்சனை
கடந்த 2021ல் ரோகினி சிந்தூரி மைசூர் கலெக்டராக இருந்தார். இந்த வேளையில் ரோகினி சிந்தூரிக்கும், மைசூர் கிருஷ்ணராஜநகரை சேர்ந்த ஜனதாதளம்(எஸ்) எம்எல்ஏ சாரா மகேசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றம்சுமர்த்தினர். இந்நிலையில் தான் தற்போது அவர்கள் 2 பேரும் ஒரு உணவகத்தில் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் வெளியாகின. இந்த போட்டோவை டி ரூபா தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து, ‛‛ஒரு அதிகாரி அரசியல்வாதியை ஏன் சந்திக்கிறார். சமரசம் செய்கிறார்களா?'' என கேள்வி எழுப்பி இருந்தார். இது தான் இரு அதிகாரிகள் இடையேயான பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டது.

20 வகையான குற்றச்சாட்டுகள்
மேலும் டி ரூபா தனது பேஸ்புக் பக்கத்திலும் ரோகினி சிந்தூரி மீது 20 வகையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஊழல், முறைகேடு தொடர்பான புகார்கள் இருந்தும் கூட அவர் மீது ஏன் விசாரணை நடத்தப்படவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும் மைசூர் மாநகராட்சி கமிஷனர் ஷில்பா நாக் உட்பட பிற அரசு அதிகாரிகளுடன் ரோகினிக்கு இருந்த மோதல்கள் பற்றியும் அவர் குறிப்பிட்டு இருந்தார். கொரோனா பரவல் சமயத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்காமல் ரோகினி சிந்தூரி நீச்சல் குளம் கட்டியது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

7 போட்டோக்களை வெளியிட்டு
மேலும் ரோகினி சிந்தூரியின் 7 தனிப்பட்ட படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று ரூபா பதிவிட்டார். அதில், ‛‛இந்த படங்களை 3 ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அவ்வப்போது ரோகினி சிந்தூரி ஷேர் செய்துள்ளார். இது ஐஏஎஸ் சர்வீஸ் நடத்தை விதிகள் படி குற்றத்துக்குரியது. இதுபற்றி எந்த விசாரணை அமைப்பு வேண்டுமானாலும் விசாரணை நடத்தலாம்'' என தெரிவித்திருந்தார். இதில் சில படங்கள் ஆபாசமான முறையில் இருந்தன.

ரோகினி சிந்தூரி பரபரப்பு
இதனால் ரோகினி சிந்தூரி கடும் கோபம் அடைந்துள்ளார். இதுபற்றி அவர் நேற்று பரபரப்பான அறிக்கை வெளியிட்டார். அதில், ‛‛ மனநோய் என்பது சிகிச்சை தேவைப்படும் ஒரு தீவிரமான பிரச்சனையாகும். பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டால் அது மிகவும் ஆபத்தானது. என்னை பற்றி தனிப்பட்ட முறையில் அவதூறு பரப்பும் வகையில் சில விஷயங்கள் நடக்கின்றன. அதுதான் அவரது செயல்பாடாகவே உள்ளது. இதற்கு முன்பு அவர் பணியாற்றிய இடங்களிலும் அவதூறு பரப்பும் செயலை அவர் செய்துள்ளார். எனது வாட்ஸ்அப்களில் ஸ்டேட்டஸ் மற்றும் ப்ரோபைல் வைத்த படங்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அவர் அவதூறு பரப்புகிறார். ரூபா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரி ரூபா மற்றும் ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி தொடர்பான இந்த மோதல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரோகிணி சிந்தூரியின் இந்த பேச்சுக்கு டி ரூபா கூறுகையில், ‛‛ரோகினி, எம்எல்ஏ சா ரா மகேசை சந்தித்தது தொடர்பான செய்திகளை படித்தேன். இது சமரச சந்திப்பாக இருக்குமோ என்ற யூகங்கள் கிளம்பி உள்ளது. இந்த விஷயத்தில் ஏன் சமரசம் செய்ய வேண்டும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ரோகினிக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். எனக்கு எதிராகவும் வழக்கு தொடரலாம். நான் நீதிமன்றத்தில் என் தரப்பு நியாயத்தை எடுத்து கூறுவேன்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications