பெங்களூர் சினிமா ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி.. திரைப்பட டிக்கெட் விலைக்கு உச்சவரம்பு நிர்ணயம்
பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் பொழுதுபோக்கு வரியுடன் சேர்த்து டிக்கெட் விலை ரூ.200 க்கு மிகாமல் இருக்க வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மல்டி பிளெக்ஸ்களுக்கும் இது பொருந்தும் என்று கர்நாடக அரசு, தியேட்டர் டிக்கெட் கட்டண விலையை நிர்ணையித்து உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் தியேட்டர் டிக்கெட் கட்டணம் ரூ.200 க்கும் மேல் இருக்க கூடாது என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து மொழி படங்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித்த தியேட்டராக இருந்தாலும் சரி, மல்டிபிளக்ஸ் திரையரங்காக இருந்தாலும் சரி அதிகபட்ச கட்டணம் ரூ 200 க்கு மேல் இருக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டணக் கட்டுப்பாடு
கேளிக்கை வரியையும் சேர்த்தே டிக்கெட் விலை 200-க்குள்தான் இருக்க வேண்டும் எனவும் புதிய கட்டணக் கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் போது இந்த அறிவிப்பை சித்தராமையா வெளியிட்டு இருந்தார். தற்போது அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வரும் வகையில் அரசு உத்தரவினை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்த விலைக்கட்டுப்பாடு கர்நாடகாவில் உள்ள அனைத்து திரையரங்கங்களுக்கும் பொருந்தும். கர்நாடகா சினிமா விதிமுறைகள் 2014-ல் இதற்கான திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து தரப்பிலான மக்களும் சிரமம் இன்றி திரையரங்குக்கு செல்ல பயனளிக்கும் விதமாக இந்த விதிமுறை திருத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சித்தராமையா பேச்சு
சினிமா திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் கட்டணம் அதிக அளவில் இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், கர்நாடக அரசு இந்த முடிவை எடுத்து இருக்கிறது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறும் போது, "அனைத்து குடிமக்களும் சினிமாவை அணுகக்கூடிய வகையில், மலிவு கலாச்சார அனுபவமாக மாற்றுவதே எங்கள் நோக்கம்" என்று கூறினார்.
கன்னட மொழிகளுக்கு மட்டும் ஓடிடி
கர்நாடக திரைப்பட வர்த்தக சபை மற்றும் கர்நாடக திரைப்பட சங்கம் உள்ளிட்ட தொழில் அமைப்புகள் அரசின் முடிவை வரவேற்றுள்ளன. இதுதவிர ஓடிடி பிளாட்பார்ம் ஒன்றை உருவாக்கும் முயற்சியிலும் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. கன்னட மொழிகள் மட்டும் இதில், வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. கன்னட மொழி படங்களை பிரபலமான ஓடிடி தளங்கள் புறக்கணிப்பதாக ர ராக்ஷித் ஷெட்டி, மற்றும் ரிஷப் ஷெட்டி போன்ற சினிமா தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டிய நிலையில், கன்னட மொழி படங்களை ஊக்கமளிக்கும் விதமாக இந்த முடிவை கர்நாடக அரசு எடுத்துள்ளது.
தமிழக ரசிகர்கள் கோரிக்கை
தியேட்டர்களில் படம் பார்க்க சென்றால் டிக்கெட் கட்டணம், பார்க்கிங் கட்டணம், நொறுக்கு தீனிகளுக்கு பல மடங்கு விலை நிர்ணயம் என இவற்றை எல்லாம் சேர்த்தால் பெரும் தொகை செலவு ஆவதாகவும், இதனை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று சினிமா ரசிகர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பபடுகிறது.
குறிப்பாக 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் படம் பார்க்க சென்றால் குறைந்தது 2 ஆயிரம் செலவு ஆகிவிடுறது என்றும், தியேட்டர்களில் இப்படி வரம்பு மீறி கட்டணம் வசூலிப்பதற்கு கடிவாளம் போடப்பட வேண்டும் என்று தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது.












Click it and Unblock the Notifications