"ஏலியன்" மொழியில் மெசேஜ்? நான்சென்ஸ்.. இந்திக்கு எதிராக உணவு டெலிவரி நிறுவனத்தை கதறவிட்ட கன்னடர்!
பெங்களூர்: உணவு டெலிவரி நிறுவனங்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்புவது 'வாடிக்கை'. நாமும் ஏதோ ஆர்டர் செய்த உணவு வீடு வந்து சேர்ந்தால் போதும் என கடந்து செல்வதும் 'வாடிக்கை'. ஆனால் பெங்களூரைச் சேர்ந்த கன்னட மொழிப் பற்றுள்ள வாடிக்கையாளர் இந்த விவகாரத்தை கையில் எடுத்து உணவு டெலிவரி நிறுவனங்களை எல்லாம் கதறடித்திருக்கிறார் என்பதுதான் சுவாரசியம்.
ஸ்விக்கி, ஜொமேட்டோ, பிளின்கிட்.. இப்படி ஏகப்பட்ட உணவு டெலிவரி நிறுவனங்கள் நம்மை மிகவும் சோம்பேறிகளாக்கிக் கொண்டுதான் இருக்கின்றன. வீட்டு சமையலையே மறக்கடிக்கிற அளவுக்கு ஹோட்டல் உணவுகளுக்கு அடிமைகளாக்கக் கூடியவை மட்டுமல்ல.. நம்மை மீறி அதீதமான செலவுகளுக்கு நம்மை இழுத்துக் கொண்டு போய்விடக் கூடியதும் இந்த உணவு டெலிவரி நிறுவனங்கள்தான்.. இயந்திரமான உலகத்தில் இதெல்லாம் சகஜமப்பா என சலித்துக் கொண்டே கடக்கிறவர்களாகிவிட்டோம்.

மொழி உணர்வு: இப்படியான உணவு டெலிவரி நிறுவனங்கள், உணவுப் பொருட்களை நம்மிடம் சேர்ப்பதில்தான் குறியாக இருக்கின்றன. நமது மொழி உணர்வுகள் குறித்து கிஞ்சித்தும் சிந்திக்க முடியாத இயந்திரங்களாகவும் இருக்கின்றன. இந்தப் போக்குக்குதான் மணி கட்டிவிட்டிருக்கிறார் பெங்களூர் வாடிக்கையாளர் ஒருவர்.
இந்தியில் மெசேஜ்: @Metikurke என்ற பெயரிலான கர்நாடகா நெட்டிசன்தான் உணவு டெலிவரி நிறுவனங்களின் 'மொழி' திணிப்பு போக்குக்கு எதிராக வெடித்து எழுந்தவர். பிளின்கிட் ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்த @Metikurke-க்கு இந்தியில் மெசேஜ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தி மொழி மெசேஜில் உங்களது உணவு ஆர்டர் 12 நிமிடங்களில் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மிரட்டலா விடுக்கிறீங்க?: @Metikurke இதை அப்படியே விட்டுவிடுவதாக இல்லை. பிளின்கிட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு 'ஆங்கிலத்தில்' ஒரு புகார் அனுப்பினார். அதில், நீங்கள் இந்தியில் "gaya" என மெசேஜ் அனுப்பி இருக்கிறீர்கள். இதற்கு கன்னட மொழியில் "gaya" என்றால் "காயம்" என பொருள். அப்படியானால் என்னை காயப்படுத்தப் போவதாக மிரட்டல் விடுக்கிறீர்களா? நான் ரொம்பவே பயந்து போய்விட்டேன். இப்படியான "மிரட்டல்" மெசேஜ் தொடர்ந்து வந்தால் போலீசில் புகார் செய்வேன் என அதிரவிட்டிருக்கிறார். இதனையடுத்து அந்த நெட்டிசனுக்கு "இந்தி" மொழியில் மெசேஜ் அனுப்புவது நிறுத்தப்பட்டுவிட்டு ஆங்கிலத்தில் அனுப்பி உள்ளது பிளின்கிட் நிறுவனம். மேலும் இது மிரட்டல் மெசேஜ் அல்ல.. வழக்கமான அனுப்பப்படும் மெசேஜ் தான் எனவும் கூறியிருக்கிறது.
ஏலியன் மொழியா? நான்சென்ஸ்: ஆனால் அந்த நெட்டிசன் அவ்வளவு எளிதாக விட்டுவிடவும் இல்லை. எனக்கு கன்னட மொழியில்தாம் மெசேஜ் அனுப்ப வேண்டும் எனவும் கலகக் குரல் எழுப்பி இருக்கிறார். மேலும் இப்போது எனக்கு ஆங்கிலத்தில்தான் மெசேஜ்கள் வருகின்றன. ஏலியன்கள் மொழியில் (இந்தி) மெசேஜ் வருவது இல்லை. நான்சென்ஸ்.. இதேபோல நிறைய பேர் புகார்கள் கொடுத்தால்தான் கன்னடத்தில் மெசேஜ் அனுப்புவார்கள் என புதிய பஞ்சாயத்தையும் அவர் கூட்டியிருக்கிறார். இந்த விவரங்கள் அனைத்தையும் தமது சமூக வலைதளப் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் அந்த நெட்டிசன்.
போலீஸ் நடவடிக்கை: சரி அப்படியே நெட்டிசன் போலீசில் என்னை காயப்படுத்துவதாக மிரட்டல் விடுக்கிறது பிளின்கிட் நிறுவனம் என புகார் கொடுத்தால் இந்த புகாரை போலீசார் ஏற்பார்களா? என்ன நடவடிக்கை எடுப்பார்கள்? என்கிற ஒரு விவாதமும் சமூக வலைதளங்களில் மையம் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications