டிகே சிவக்குமாருக்கு சக்சஸ்.. ராஜினாமா முடிவை திரும்ப பெற்றார் கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி
பெங்களூரு: கர்நாடக முதல்வராக டிகே சிவக்குமார் கடந்த 3ம் தேதி பதவியேற்றார். அவருடன் துணை முதல்வர், 12 அமைச்சர்கள் பதவியேற்றனர். பதவியேற்ற 2வது நாளில் பெங்களூர் நகர வளர்ச்சி துறை ஒதுக்கவில்லை என்று கூறி மூத்த காங்கிரஸ் தலைவர் ராமலிங்க ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவரை டிகே சிவக்குமார் உள்பட பலர் சமாதானம் செய்த நிலையில் ராமலிங்க ரெட்டி ராஜினாமா முடிவை திரும்ப பெற்றுள்ளார். அவருக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
கர்நாடகா முதல்வராக டிகே சிவக்குமார் கடந்த 3ம் தேதி பதவியேற்றார். அவருடன் ஒரு துணை முதல்வர், 12 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். இதில் பெங்களூர் பிடிஎம் லே-அவுட் தொகுதியின் எம்எல்ஏவான ராமலிங்க ரெட்டியும் ஒருவர். காங்கிரஸ் கட்சியின மூத்த தலைவரான இவர் 8 வது முறையாக எம்எல்ஏவாக உள்ளார்.

இவர் டிகே சிவக்குமார் அமைச்சரவையில பெங்களூர் நகர வளர்ச்சி துறையை எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு அந்த துறை கிடைக்கவில்லை. பெங்களூர் நகர வளர்ச்சி துறைக்கு பதில் பெரிய மற்றும் சிறிய நீர்ப்பாசனத்துறை வழங்கப்பட்டதால் ராமலிங்க ரெட்டி அதிருப்தியடைந்தார். இதையடுத்து கடந்த 5ம் தேதி ராமலிங்க ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கான கடிதத்தை அவர் முதல்வர் டிகே சிவக்குமாருக்கு எழுதினார். அமைச்சராக பதவியேற்ற 2-வது நாளிலே மூத்த அமைச்சர் ராஜினாமா செய்ததால் முதல்வருக்கு நெருக்கடி ஏற்பட்டது இதையடுத்து, கர்நாடகா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, முதல்வர் டிகே சிவகுமார் ஆகியோர் ராமலிங் ரெட்டியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.
தொலைபேசி மற்றும் நேரில் சந்தித்து பேசி ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என்று கூறினர். அதேபோல்
முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் ராமலிங்க ரெட்டியிடம் இதுகுறித்து பேசினர். அதில் ராமலிங்க ரெட்டி சமாதானம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் டி.கே.சிவகுமார் அளித்த பேட்டியில், ''ராமலிங்க ரெட்டி என் நண்பர். அவரது பிரச்சனை பேசி முடித்தாகி விட்டது. அவர் எனக்கு வாட்ஸ் அப்பில் தான் ராஜினாமா கடிதம் அனுப்பினார். அதனை திரும்ப பெறுவதாக கூறிவிட்டார். எனவே அதை பெரிதுபடுத்த வேண்டாம். புதிய கதைகளை உருவாக்கி அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம்'' என்றார்.
இந்த பேச்சுவார்த்தையின்போது ராமலிங்க ரெட்டிக்கு கூடுதல் இலாகா வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பெங்களூர் நகர வளர்ச்சி துறையை கிருஷ்ணபைரே கவுடாவிற்கு ஒதுக்கிவிட்டதால் அந்த துறையை தர முடியாது. மாறாக உங்களுக்கு பெரிய, நடுத்தர நீர்ப்பாசனத்துறையுடன் கூடுதல் துறை ஒதுக்கீடு செய்யப்படும் என உறுதியளித்தனர்.
வீட்டு வசதித்துறை, சிறிய நீர்ப்பாசனத்துறை அல்லது அறநிலையத்துறை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை தருகிறோம் என்று டிகே சிவக்குமார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமலிங்க ரெட்டி சமாதானம் அடைந்து ராஜினாமாவை திரும்ப பெற ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications