பெங்களூர், மங்களூர் குண்டுவெடிப்புகளில் தொடர்பு- கர்நாடகாவில் 'துபாய் ரிட்டர்ன்' இளைஞர் அதிரடி கைது!
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு, பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய இளைஞர் ஒருவரை தேசியப் புலனாய்வு ஏஜென்சிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர். பக்ரீத் பண்டிகை கொண்டாட துபாயில் இருந்து கர்நாடகா மாநிலம் சிர்சிக்கு வந்த அப்துல் சுக்கூர் என்ற இளைஞரை தேசியப் புலனாய்வு ஏஜென்சிகள் நேற்று கைது செய்தனர்.
2022-ம் ஆண்டு மங்களூர் அருகே ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட குக்கர் குண்டு பயங்கரமாக வெடித்து சிதறியது. இது தொடர்பாக தேசியப் புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மங்களூர் கத்ரி மஞ்சுநாதர் கோவிலைத் தகர்க்க குக்கர் வெடிகுண்டு எடுத்துச் செல்லப்பட்ட போது வெடித்தது தெரிய வந்தது. இந்த குக்கர் வெடிகுண்டு எடுத்துச் சென்ற ஷாரிக், அவருக்கு உடந்தையாக இருந்த மாஸ் முனீர் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டிலும் இந்த குக்கர் வெடிகுண்டு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கர்நாடகா மாநிலம் பெங்களூர் ராமேஸரம் கஃபேயில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதுவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாகவும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மங்களூர், பெங்களூர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய அப்துல் சுக்கூர், துபாயில் இருந்து கர்நாடகாவின் சிர்சிலிக்கு வந்துள்ளதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சிர்சிலி சென்ற தேசியப் புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள், அப்துல் சுக்கூரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரது செல்போன், லேப்டாப்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். அப்துல் சுக்கூரிடம் இருந்து சில போலி பாஸ்போர்ட்டுகளும் சிக்கி இருக்கின்றன. துபாயில் பணிபுரிந்து கொண்டே போலி பாஸ்போர்ட்டுகள் மூலம் வெளிநாடுகளுக்கு அப்துல் சுக்கூர் சென்று பயங்கரவாத செயல்களுக்கு உதவி செய்ததும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. கர்நாடகா, தமிழ்நாடு, கேரளாவில் அப்துல் சுக்கூருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications