ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்
பெங்களூர்: கர்நாடக முதலமைச்சராக இருந்த சித்தராமையா, கட்சியின் மேலிடம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் பதவி விலகினார். இதனையடுத்து ஆளுநரை சந்தித்திருந்த டி.கே.சிவகுமார் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார். தற்போது சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
காங்கிரஸில் உட்கட்சி பஞ்சாயத்து இல்லை என்றால்தான் ஆச்சரியம். அந்த வகையில் கடந்த 2023 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் கட்சி வெற்றி பெற்ற பின்னர், யார் முதலமைச்சராவது என்று அதிகார போட்டி ஏற்பட்டிருந்தது.

சித்தராமையாவின் ராஜினாமா
ஒரு பக்கம் சித்தராமையா தன்னை முன்னிறுத்தினார். நான்தான் சீனியர், ஏற்கெனவே முதலமைச்சராக பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. மத்திய அரசின் தலையீடுகளை எப்படி டீல் செய்வது என்பது தெரியும். மட்டுமல்லாது, சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகளின் பிரதிநிதி நான்தான் என்று கூறி, முதல்வர் பதவிக்கு நான்தான் தகுதியானவன், என்னை மீறி வேறு யாராவது முதல்வரானால் பஞ்சாயத்து பெரியதாக வெடிக்கும் பார்த்துக்கோங்க என்று தலைமையை சூசகமாக மிரட்டியிருந்தார் சித்தராமையா.
மறுபுறம் கட்சியின் வளர்ச்சிக்கும், குறிப்பாக தேர்தல் வெற்றிக்கும் நான்தான் காரணம் என்று டி.கே.சிவகுமார் தன்னை முன்னிறுத்த இருவரின் ஆதரவாளர்களும் மோதிக்கொண்டனர்.
தலைமையின் முடிவு
என்னடா இது, ஜெயிச்சும் ஆட்சி அமைக்க முடியலையே! என்று புலம்பிய காங்கிரஸ் டெல்லி தலைமை, சரி ஆளுக்கு 2.5 ஆண்டுகள் முதலமைச்சராக இருங்கள் என்று சமாதானம் சொல்லி அனுப்பியது. இதனையடுத்து 2023 முதல் சித்தராமையா 3 ஆண்டுகள் பதவியில் இருந்தார். சொன்னது என்னவோ 2.5 ஆண்டுகள்தான். ஆனால் இவர் 3 ஆண்டுகாலம் முழுசாக பதவியில் இருக்கிறார் என்று சிவகுமாரின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்க, மீண்டும் பஞ்சாயத்து டெல்லி தலைமைக்கு போனது.
போர்க்கொடி தூக்கிய சிவகுமார்
ராகுல் காந்தி ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை மேற்கோள்காட்டி சித்தராமையாவை பதவி விலக சொல்ல, அவரும் பதவி விலகிக்கொண்டார். மறுபுறம் காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவராக தேர்வு செய்யப்பட்ட டி.கே.சிவகுமார், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார். இதனையடுத்து ஆளுநர் சிவகுமாருக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஜூன்.3ம் தேதி சிவகுமார் முதலமைச்சராக பதவியேற்பார் என்று சொல்லப்படுகிறது.
சித்தராமையாவின் ஆட்டம்
என்னதான் சிவகுமார் முதலமைச்சராக பதவியேற்க இருந்தாலும், சித்தராமையா சும்மா இருப்பதாக தெரியவில்லை. அரசுக்கும், கட்சிக்கும் பாலமாக ஒரு குழுவை உருவாக்க வேண்டும் என்றும், அந்த குழுவின் தலைவராக தன்னை நியமிக்க வேண்டும் என்று ராகுல் காந்திக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். இதன் மூலம் சிவகுமார் தலைமையிலான ஆட்சியை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications