பெங்களூரை "ஸ்வீப்" செய்யும் காங்கிரஸ்.. பாஜகவிற்கு பெரிய அடி.. மொத்தமாக காலியாமே.. பரபர சர்வே!
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் பெங்களூர் மாநகர பகுதியில் உள்ள தொகுதிகளில் காங்கிரஸ்தான் அதிக இடங்களை வெல்லும் என்று ஏபிபி சேனல் - சி வோட்டர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அங்கு தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.
கர்நாடகா- 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. கர்நாடக சட்டசபைத் தேர்தல் மே 10ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

தேர்தல்
தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 5.21 கோடி வாக்காளர்களில் 2.62 கோடி ஆண் வாக்காளர்களும், 2.59 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். அங்கே ஹிஜாப் விவகாரம், பெங்களூரில் திட்டங்களுக்கு கமிஷன் பெற்ற விவகாரம், மத மோதல், ஜாதி ரீதியிலான மோதல் உள்ளிட்ட பல விஷயங்கள் தேர்தல் நேரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல்
இந்த நிலையில்தான் கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சி முடிவிற்கு வந்து, காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஏபிபி சேனல் மற்றும் டி வோட்டர் வெளியிட்ட கருத்து கணிப்பில், மொத்தம் அம்மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில் 127 இடங்கள் வரை அதிகபட்சம் பெற்று காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எத்தனை இடங்கள்
பாஜக - 68 - 80
காங்கிரஸ் 115-127
மதசார்பற்ற ஜனதா தளம் 23-35
என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது காங்கிரஸ் இந்த தேர்தலில் வெற்றிபெற்று அங்கே ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

மெஜாரிட்டி
கர்நாடகாவில் மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும். இந்த நிலையில் பாஜகவிற்கு கண்டிப்பாக மெஜாரிட்டி கிடைக்காது. பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதும் கடினம். பெரும்பாலும் காங்கிரஸ் தனி மெஜாரிட்டி பெறும் என்று இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அல்லது மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க வேண்டிய நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. பாஜக கடந்த தேர்தலில் வென்ற 104 இடங்களில் இருந்து 83 இடங்கள் அல்லது அதற்கு கீழாக குறையும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூர்
முக்கியமாக பெங்களூர் பகுதியில் அதாவது பெங்களூர் மாநகர பகுதியில் உள்ள தொகுதிகளில் காங்கிரஸ்தான் அதிக இடங்களை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது காங்கிரஸ் 15-19 இடங்களை பெங்களூர் மாநகரத்தில் வெல்லும் வாய்ப்புகள் உள்ளன. பாஜக இங்கே 11-15 இடங்களை வெல்லும் வாய்ப்புகள் உள்ளன என்று கணிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கடந்த தேர்தலில் வென்ற 80 இடங்களில் இருந்து இந்த முறை 122 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. கடந்த முறை கர்நாடகாவில் கிட்டத்தட்ட தொங்கு சட்டசபை உருவான நிலையில் எடியூரப்பா 6 நாட்கள் ஆட்சி அமைத்தார். அதன்பின் ஜேடிஎஸ் - காங்கிரஸ் சார்பாக குமாரசாமி ஆட்சி அமைத்தார். ஒன்றரை வருட ஆட்சி ஆபரேஷன் கமலா காரணமாக கவிழ்ந்த காரணத்தால், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தது. எடியூரப்பா மீண்டும் ஆட்சி அமைத்த நிலையில், அதன்பின் பொம்மை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் கர்நாடகாவில் பாஜக தோல்வி அடையும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications