கர்நாடகா: சோலி முடிஞ்சதா? பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடிஎஸ்-ன் 12 எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கு ஓட்டம்?
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடிஎஸ்- மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் 12 எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு காங்கிரஸுக்கு தாவப் போவதாக வெளியான தகவல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டு கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. பாஜக 66 இடங்களிலும் ஜேடிஎஸ் கட்சி 19 இடங்களிலும் வென்றது. தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜேடிஎஸ் கட்சி இடம் பெற்றிருக்கிறது. இதற்கு ஜேடிஎஸ் கட்சியில் கடும் எதிர்ப்பும் நீடிக்கிறது.

இந்த நிலையில் ஜேடிஎஸ் கட்சியின் நிறுவனரான தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, 300 பெண்களை நாசமாக்கி 3000 ஆபாச வீடியோக்கள் விவகாரத்தில் சிக்கி இருக்கிறார். பிரஜ்வல் தந்தை ரேவண்ணா அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறது. பிரஜ்வல் ரேவண்ணா தற்போது வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்.
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம், கர்நாடகா அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது. இதனால் ஜேடிஎஸ் கட்சியில் இருந்து பிரஜ்வல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ரேவண்ணா, பிரஜ்வல் ஆகியோருக்கு எதிராக ஜேடிஎஸ் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இன்னொரு பக்கம், ஜேடிஎஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க வேண்டும் என்பதற்காகவே பாஜகதான் பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோக்களை வெளியிட்டது என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து ஜேடிஎஸ் கட்சியின் 12 எம்.எல்.ஏக்கள் கூண்டோடு காங்கிரஸுக்கு ஓடப் போவதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் துணை முதல்வருமான டிகே சிவகுமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு டிகே சிவகுமார் அளித்த பதில்: ஜேடிஎஸ் கட்சியின் 12 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸில் இணைவதாக வெளியான தகவல்களில் எந்த உண்மையும் இல்லை. இது ஒரு வதந்தி. காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் யாரும் என்னை தொடர்பு கொள்ளவும் இல்லை. ஜேடிஎஸ் கட்சி குடும்பத்துக்குள்ளேயே ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன. இவ்வாறு டிகே சிவகுமார் தெரிவித்தார்.











Click it and Unblock the Notifications