83 ஆண்டுகள் கழித்து ஜூனில் நிரம்பிய கேஆர்எஸ் அணை! தமிழகத்திற்கு 82 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
பெங்களூர்: கர்நாடக அணைகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் தமிழகத்திற்கு வினாடிக்கு 82 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நேற்று இரவு 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 52 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.
இதையடுத்து அணையிலிருந்து வினாடிக்கு 51 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர் மட்டம் 122.90 அடியாக உயர்ந்துள்ளது. இது போல் மேலும் ஓரிரு நாட்கள் மழை பெய்தால் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போல் கேரளாவில் வயநாட்டிலும் கனமழை கொட்டி வருகிறது. அங்குள்ள நீர் நிலைகள் நிரம்பி ஊருக்குள் வழிந்தோடுகிறது. குறிப்பாக கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அது போல் மைசூரில் உள்ள கபிணி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கபினி அணைக்கு வினாடிக்கு 31 ஆயிரம் கனஅடி நீர் வருகிறது. இதையடுத்து அங்கிருந்து அதே 31 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. எனவே கேஆர்எஸ் எனப்படும் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து 82 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. அதே வேளையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
83 ஆண்டுகள் கழித்து கேஆர்எஸ் அணையில் அதிலும் ஜூனில் அதிகபட்சமாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதுவரை ஜூன் மாதம் கேஆர்எஸ் அணை முழு கொள்ளளவை எட்டியதில்லை. 1940 ஆம் ஆண்டு எட்டியதுடன் கடைசி.
காவிரியில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் முதல்வர் சித்தராமையா வழக்கமாக ஜூலை அல்லது ஆகஸ்டில் நடத்தும் பாகினா எனும் பூஜையை தற்போதே நடத்திவிட்டார். பொதுவாக அணைகள் நிரம்பினால் இது போல் நடத்தப்படுவது வழக்கமாம். அதாவது புடவை, ரவிக்கை துண்டு, பழங்கள், வளையல்கள், குங்குமம், மஞ்சள், பூக்கள், அரிசி உள்ளிட்டவைகளை வைத்து வழிபட்டனர்.
கர்நாடகா அணைகளில் பல்வேறு அணைகளின் நீர் மட்டம் என்ன என்பதை பார்க்கலாம். ஹாரங்கி அணையில் 121 அடியாகவும் ஹேமாவதியில் 110.8 அடியாகவும் கபிணியில் 60.1 அடியாகவும் கேஆர்எஸ்ஸில் 120.9 அடியாகவும் நீர் மட்டம் உள்ளது.












Click it and Unblock the Notifications